கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் விவாதங்களில் தெளிவும், மாற்றம் இருந்த காலம் போய், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விட்டதாக முன்னாள் சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் கூறினார்.
இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்நடத்தையுடன் விவாதித்தனர். உண்மைகள், சான்றுகள் அடிப்படையில் விவாதத்தில் கலந்து கொண்டனர் என்று அவர் கூறினார்.
“இப்போது நடப்பதைப் பார்த்தால், முன்பு இருந்த நிலைக்கே திரும்பி விட்டது போல் தெரிகிறது.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் கூச்சலும், அமளியும் ஏற்பட்டு வருகிறது. பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவை இனவெறி, பாலின கூற்றுகளால் அவமத்தித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
71 வயதான முகமட் அரிப், மாற்றங்கள் நிகழ்ந்து, அப்போதைய விவாதத்தின் தரம் மேம்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வம்பு செய்து அமர்வை சீர்குலைக்க விரும்பினர் என்று ஒப்புக் கொண்டார்.
“அவர்கள் அவையை விட்டு வெளியேறவோ அல்லது அறிவுறுத்தும்போது அமரவோ விரும்பவில்லை. அவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், அவையில் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர் “என்று அவர் கூறினார்.