கோலாலம்பூர்: சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ சைட் அபாஸ் சைட் அலியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
“சபா சட்டமன்ற சபாநாயகர் முதலில் அறிவிப்பை வழங்க வேண்டும். அறிவிப்பு கிடைத்ததும், தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையை வெளியிடும், ” என்று தேர்தல் ஆணைய அதிகாரி இன்று தெரிவித்தார்.
சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் இன்று கோத்தா கினபாலுவில் செய்தியாளர் சந்திப்பில் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். அதற்கு சபா ஆளுநர் துன் ஜூஹார் மஹிருதீடின் ஒப்புதல் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
சபா சட்டமன்றம் தற்போது 65 இடங்களைக் கொண்டுள்ளது.
புதன்கிழமை, முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் செய்தியாளர் கூட்டத்தில் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு எளிய பெரும்பான்மை இருப்பதாகக் கூறினார்.