கோத்தா கினபாலு: சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடடின், மாநில சட்டமன்றத்தை கலைக்க இலஞ்சம் பெற்றதாக ஓர் அரசு சாரா அமைப்பு கூறிய குற்றச்சாட்டுகளை சபா மாநில அரண்மனை இன்று மறுத்துள்ளது.
மலேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் சுல்கர்னைன் மஹ்டார், அதிகார அத்துமீறல் மற்றும் ஊழல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்ததுக் குறித்து ஆளுநரின் அந்தரங்கச் செயலாளர் அபினான் அஸ்லி இந்த மறுப்பினைத் தெரிவித்தார்.
“சுல்கர்னைன் மஹ்தார் கூறிய குற்றச்சாட்டுகளை இஸ்தானா நெகேரி இதன்மூலம் கடுமையாக மறுக்கிறது
“இந்த அறிக்கை பொய்யானது மற்றும் முற்றிலும் ஆதாரமற்றது. தீங்கிழைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஜூலை 30-ஆம் தேதி மூசா அமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரண்மனைக்குள் நுழைவதைத் தடுக்குமாறு மாநில அரண்மனை ஒருபோதும் காவல்துறைக்கு அறிவுறுத்தவில்லை என்றும், அதற்கு பதிலாக தேவையற்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்காக காவல் துறையினரால் தடுக்கப்பட்டது என்றும் அபினான் கூறினார்.
சபா மாநில அரண்மனை ஒருபோதும், மாநில ஆளுநரைச் சந்திக்க மூசா அமான் தரப்பின் விண்ணப்பத்தைப் பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பில் கையெழுத்திடுவதற்கு முன்பு, ஆளுநர் 33 சத்தியப்பிரமாணங்களைப் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.