Home One Line P2 இந்தியாவுக்கான சீன பொருட்களின் இறக்குமதி கடும் சரிவு

இந்தியாவுக்கான சீன பொருட்களின் இறக்குமதி கடும் சரிவு

725
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட இராணுவ மோதல்களைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் இந்திய மக்களிடையே  எழுந்தன. சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பிரச்சாரங்கள் இந்தியா முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து சீனாவின் இறக்குமதிகளின் மதிப்பும், அளவும் இந்தியாவில் பெருமளவில் குறைந்து இருக்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி முதற்கொண்டு இந்தியாவிலிருந்து சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் 6.7 விழுக்காடு உயர்ந்தன. அதன் மதிப்பு 11.09 பில்லியன் டாலர்களாகும்.

#TamilSchoolmychoice

அதேவேளையில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இந்த ஆண்டு ஜனவரி முதற்கொண்டு 24.7 விழுக்காடு வீழ்ச்சியடைந்து அதன் மதிப்பு 32.28 பில்லியன் டாலர்களாக இருந்தது.

எல்லைப் பிரச்சினைகள், மோதல்களைத் தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரங்கள் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் சீனாவின் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது கணிசமாக குறைந்தது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்புப் பிரச்சாரங்கள் வெற்றி பெற்றிருப்பதைக் காட்டுகின்றன.

இதற்கிடையில், இந்தியா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கடுமையான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது.

உதாரணமாக சீனாவிலிருந்து தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. உள்நாட்டு தொலைக்காட்சி பெட்டிகள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து 300 மில்லியன் டாலர் மதிப்பிலான தொலைக்காட்சிப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் வியட்நாமில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான தொலைக்காட்சிப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன.

அண்மையில், இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளின் மொத்த மதிப்பு 781 மில்லியன் டாலர் ஆகும்.

பல்வேறு சீனப் பொருட்கள் தென்கிழக்காசிய நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் நுழைவதைத் தடை செய்வதற்கும் இந்திய அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பல்வேறு மின்சார, மின்னிலக்கக் கருவிகள் மலேசியா சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளின் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கின்றன.

அத்தகைய பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழையாமல் இருக்கவும் தனது கண்காணிப்புகளை இந்தியா தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களில் ஒன்று செல்பேசிகள். சியாவுமி என்ற வணிக முத்திரை கொண்ட சீனாவின் செல்பேசி இந்தியாவின் சந்தையில் முதலிடம் வகித்து வந்தது.

சீனாவின் செல்பேசிகள் 2020 ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் விற்பனைச் சரிவை சந்தித்தன.

மார்ச் 2020 முடிந்த காலாண்டில் இந்தியாவில் 81 விழுக்காடாக இருந்த சீனாவின் செல்பேசி சந்தை ஜூன் முடிந்த காலாண்டில் 72 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது.

பல்வேறு துறைகளில் சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இந்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்றது. மரத் தளவாட சாமான்கள், விளையாட்டுப் பொருட்கள், துணி வகைகள், விளையாட்டுப் பொருட்கள், குளிரூட்டிகள் (ஏர்கண்டிஷன்), தோல் பொருட்கள், காலணிகள், விவசாய இரசாயன பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சீனாவில் இருந்து வரவழைக்கப்படும் மருந்து பொருட்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டிருக்கின்றது.

இப்படி பல முனைகளிலும் சீனாவின் பொருட்கள் மீது இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளினால் சீனாவின் இறக்குமதி இந்தியாவில் கணிசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.