கோலாலம்பூர்: குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவோரை அச்சுறுத்துவது உட்பட எந்தவொரு குண்டர் கும்பல் நடவடிக்கைகளையும் மலேசிய காவல் துறை அனுமதிக்காது.
அண்மையில் சுங்கை பூலோவில் சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து ஆடவர் ஒருவர் தகவல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, குண்டர் கும்பலால் அச்சுறுத்தப்பட்டதாக ‘ஹாட் பர்கர் மலேசியா’வின் உரிமையாளர் முகமட் அஸ்ரி ஹமீட் (42) குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் குறிப்பிட்டுப் பேசினார்.
“அவருக்கு (முகமட் அஸ்ரி) அல்லது குற்றச் செயல்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட எவருக்கும் நடந்த அச்சுறுத்தல்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று புக்கிட் அமானில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவிய சுங்கை பூலோவில் சூதாட்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதில் அதிருப்தி அடைந்த ‘அயாண்டா’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், தம்மை தொடர்பு கொண்டதாக முகமட் அஸ்ரியின் அறிக்கையை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.