அலோர் ஸ்டார்: நேற்று வியாழக்கிழமை இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தால் , நாப்போவில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை மற்றும் 12,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளனர்.
சிவகங்கா தொற்றுக் குழுவினால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டதற்கு, இழப்பீடு கோர விரும்பும் வணிகர்கள் மற்றும் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கெடா பயனீட்டாளர் சங்கத்தின் (கேக்) செயலாளர் முகமட் யூஸ்ரிசல் யூசோப் இந்த விஷயத்தை தெரிவித்தார்.
“இதுவரை, மளிகை கடை, இரவு சந்தை வணிகர்கள் மற்றும் நாப்போ உணவகத்தைச் சுற்றியுள்ள தினசரி கூலித் தொழிலாளர்கள் அடங்கிய மொத்தம் 100 வணிகர்கள் எங்களிடம் புகார்களை அளித்துள்ளனர். மேலும் அவர்களின் வருமானம் பாதிக்கப்பட்ட பின்னர் இழப்பீடு கோர விரும்புகிறார்கள்.
“முன்னதாக (நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது) அவர்களின் வருமானம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த கடையின் உரிமையாளரால் ஏற்பட்ட மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து மீண்டும் வருமானம் பாதிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நேசார் முகமட் சாபூர் பாட்சா என்ற 57 வயதுடைய உணவக உரிமையாளர் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி அவர் நடந்து கொண்டதாக அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
அலோர் ஸ்டாரிலுள்ள பழைய மருத்துவமனையின் வளாகத்திலேயே நடத்தப்பட்ட சிறப்பு வழக்கு அமர்வின் போது, விசாரணைக்குப் பின்னர் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொற்று நோய்கள் தடை மற்றும் கட்டுப்பாடு மீதான 1988-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் நேசார் மீது சுமத்தப்பட்டன.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வந்ததால் இந்த சுற்றுப்புறத்தில் பல பேருக்கு அவர் மூலம் கொவிட்-19 தொற்று பரவியது.
தமிழ்நாடு, சிவகங்கை நகரிலிருந்து அவர் நாடு திரும்பிய போது அவருக்கு இந்த தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த தொற்று நோய் பரவலுக்கு சிவகங்கா தொற்று என சுகாதார அமைச்சு பெயரிட்டது.
அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 3 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தமாக ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.