கோலாலம்பூர் : விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இலக்கு கொண்டிருக்கிறது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விக்னேஸ்வரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த 2018 பொதுத் தேர்தலிலும் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.
எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் எண்ணிக்கை விரைவில் முடிவாகும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
பல தொகுதிகள் பரிமாற்றம் நிகழக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகள் விட்டுக் கொடுக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய நாடாளுமன்றத் தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்படும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம்”
இதற்கிடையில் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் “மஇகா அம்னோவுடனும், பாரம்பரியக் கூட்டணியான தேசிய முன்னணியோடு மட்டுமே இணைந்திருக்கும். மாறாக, பெரிக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் தேசியக் கூட்டணியோடு தற்போதைக்கு இணையாது” எனவும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.
“கடந்த முறை இலங்காவி தீவில் நடைபெற்ற மத்திய செயலவையின்போது தேசியக் கூட்டணியோடு இணைந்திருப்போம் என முடிவெடுத்தோம். ஆனால் அதற்குப் பின்னர் நிகழ்ந்த சில அரசியல் சம்பவங்களைத் தொடர்ந்து அம்னோ தேசியக் கூட்டணியோடு (பெரிக்காத்தான் நேஷனல்) இணையப் போவதில்லை என முடிவெடுத்தது. முவாபக்காட் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தவும் தேசிய முன்னணியைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் அம்னோ அறிவித்தது. அதைத் தொடர்ந்து நாங்களும் அம்னோவுடனும், தேசிய முன்னணியோடும் எங்களின் அரசியல் பயணத்தைத் தொடர்வோம். தற்போதைக்கு தேசியக் கூட்டணியில் இணைய மாட்டோம். கால ஓட்டத்தில் அம்னோ, தேசிய முன்னணி சக தலைவர்களோடு எதிர்கால முடிவுகளை எடுப்போம்” என்றும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.