கோலாலம்பூர்: ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க சபா மாநில ஆளுநர் எடுத்த முடிவை விசாரிக்க முடியுமா என்று கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 21 அன்று முடிவு செய்யும்.
நீதித்துறை ஆணையர் லியோனார்ட் டேவிட் ஷிம், டான்ஸ்ரீ மூசா அமான் மற்றும் 32 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், விண்ணப்பதாரர்கள் மற்றும் ஆளுநர் துன் ஜூஹார் மஹிருடடினைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட பின்னர் இந்த தேதியை நிர்ணயித்தார்.
ஆகஸ்ட் 7 அன்று சரவாக் உயர்நீதிமன்ற நீதிபதி, நீதித்துறை ஆணையர் லியோனார்ட் சின், 33 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கை செவி மடுக்கவும், முடிவு செய்யவும் நீதிமன்றத்திற்கு, நீதித்துறை அதிகாரம் அளித்துள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர்களிடமிருந்து மேலதிக வாதங்களை கேட்க ஆகஸ்ட் 17 தேதியை அறிவித்திருந்தார்.
அண்மையில், சபா மாநிலத் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 17 அன்று சிறப்பு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. பின்னர் அது, அதன் செய்தியாளர் சந்திப்பை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தது.
தேர்தல் வேட்பாளர், நியமனம் நாள், வாக்களிக்கும் நாள், வாக்காளர் பதிவு போன்ற தேர்தல் விஷயங்களின் முக்கியமான தேதிகள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பிற ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதே இந்த சிறப்புக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்மையில், மூசா அமான் தரப்பு, தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி மாநில ஆட்சியைக் கைப்பற்ற, இருந்த தருணத்தில், முதல்வர் ஷாபி அப்டால், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியதாக தெரிவித்து, சட்டமன்றத்தைக் கலைத்தார்.
மாநில முதல்வர்கள் சட்டத்தில், முதலமைச்சர்கள மாநில சட்டமன்றத்தைக் கலைக்கக் கோர உரிமை இருப்பததாக அவர் கூறியிருந்தார்.
மாநில ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அனுமதி அளித்ததாக ஷாபி தெரிவித்தார்.
அதன் பிறகு, மாநில ஆளுநரை மூசா அமான் தரப்பு சந்திக்க முயன்றபோது அவர்கள் தடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆளுநரின் இந்த முடிவு ஒரு தலைப்பட்சமானது என்றும், அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் கூறி மூசா அமான் தரப்பு நீதிமன்றத்தில் ஆளுநர், ஷாபி அப்டால், மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தது.