ஈப்போ: தனது கணவர் எம்.சுகு மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெறுமாறு யூடியூப் பிரபலம், எஸ்.பவித்ராவிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் அரசு தரப்புக்கு கிடைத்ததாக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 4-ஆம் தேதி கடிதம் கிடைத்ததாக துணை அரசு வழக்கறிஞர் நைததுல் அதிரா அஸ்மான் தெரிவித்தார். இருப்பினும், இந்த வழக்கை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசு வழக்கறிஞர் இயக்குநர் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
முன்னாள் தோட்டத் தொழிலாளி சுகு, 29, பவித்ரா (28) என்பவரை கைபேசி மற்றும் அரிவாள் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் ஜூலை 21 அன்று, மாலை 4 மணி முதல் 6 மணிக்கு இடையில் இது நடந்ததாகக் கூறப்படுகிறது.
மாலை 6 மணியளவில், அதே இடத்தில், தேதியில் ஓர் அரிவாளை சுமந்ததாக சுகு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இன்றைய விசாரணையில், சுகுவை வழக்கறிஞர்களான ஜூட் பெரேரா, சியாருல் நிஜாம் முகமட் ரபி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
நீதிபதி முகமட் பாவ்சி முகமட் நாசிர் செப்டம்பர் 17- ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
அபாயகரமான ஆயுதத்தை வைத்திருந்ததற்காக சுகு மீது ஜூலை 24 அன்று குற்றம் சட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட எம்.சுகு, 29, நீதிபதி முகமட் பாவ்சி முகமட் நாசிர் முன்னிலையில் தம்மீதான குற்றம் வாசிக்கப்பட்டபோது, அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
அரிக்கும், வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958- இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைகளை கொண்டு வரும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படியும் விதிக்கப்படும்.
துணை அரசு வழக்கறிஞர் முகமட் வாபி இஸ்மாயில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு பிணைத் தொகையையும் பணத்தையும் ஆட்சேபித்தார். இம்மாதிரியான குற்றங்களுக்கு வழக்கமாக பிணை வழங்கப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
“மருத்துவமனை ஒரு பாதுகாப்பான இடம். பொது இடங்களில் ஆயுதம் எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைக்கு நோக்கமாக ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது. பிணை கொடுக்க வேண்டுமென்றால் 20,000 ரிங்கிட் கட்டணம் வசூலிக்க விண்ணப்பிக்கிறேன், ” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி முகமட் பாவ்சி இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணத்தை கருத்தில் கொண்டு, சுகுவை, 10,000 ரிங்கிட் பிணையும், ஒருவர் உத்தரவாதத்துடன் விடுவிக்க அனுமதித்தார்.