கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி முவாபாக்காட் நேஷனலில் இணைவது, சபா தேர்தல் இட ஒதுக்கீடு பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 அன்று நடக்க இருந்த இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் தெரிவித்தார்.
முவாபாக்காட் நேஷனல் பெர்சாத்து கட்சியை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அம்னோவுக்கு இந்த விவகாரத்தில் திருப்தி இல்லாத சூழல் இருந்ததாக அவர் கூறினார்.
இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அதனால் தேசிய கூட்டணி தொடர்ந்து முன்னேற்றகரமாக செயல்பட இயலும் எனவும் அவர் கூறினார்.
“முவாபாக்காட் நேஷனல் உருவாகி முதல் ஆண்டு விழாவில் பெர்சாத்து இணைய வேண்டி இருந்தது.
“சபா தேர்தலினால் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாதக் இறுதியில் அவ்விழாவை நாங்கள் ஏற்பாடு செய்யலாம்” என்று அவர் கூறியிருந்தார்.
புத்ரா உலக வணிக மையத்தில் இரு கட்சிகளின் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்த ஒரு விழாவில் பல தசாப்தங்களாக அரசியல் எதிரிகளாக இருந்தபின், கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி அம்னோ-பாஸ் கட்சிகள் முறையாக அரசியல் உறவை உருவாக்கினர்.