கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதை அடுத்து பல அரசியல் தலைவர்களை அதனை ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.
அவ்வகையில், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான அமானா, ஜசெக தாங்கள் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளன. சரவாக்கில் இது போன்ற எந்தவொரு ஆதரவும் அன்வாருக்குத் தெரிவிக்கவில்லை என்று மாநில முதலைமைச்ச அபாங் ஜொஹாரி கூறியுள்ளார்.
அன்வாரின், இந்த அறிவிப்பு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துள்ளன, ஆயினும், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, அம்னோ, தேசிய முன்னணியிலிருந்து அன்வாருக்கு ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆதரவுக்கு தாம் எந்த தடையும் விதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், “கவலைப்படுவதற்கு எதுவுமில்லை, நான் இப்போது அமைச்சரவை சந்திப்புக் கூட்டத்தில் உள்ளேன். மக்களுக்காக திட்டமிடுவதில் மும்முரமாக பிரதமருடன் செயல்பட்டு வருகிறோம்” என்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடன் அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, “அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன். மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பேன். எனது இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்து விட்டது” என்று அன்வார் இப்ராகிம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.