Home One Line P1 ‘பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை’- அம்னோ தலைவர்கள்

‘பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை’- அம்னோ தலைவர்கள்

540
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தம்மிடம் இருப்பதாக அறிவித்ததில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இது “ஒரு ஏமாற்று வேலை” என்று அவர்கள் கூறுகின்றனர்.

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், அன்வார் மேலும் ஒரு செப்டம்பர் 16 ஆட்டத்தை விளையாடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

“அவர் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்க முயற்சிக்கிறார் அல்லது சனிக்கிழமை சபா மாநிலத் தேர்தலில் வாக்காளர்களின் முடிவினை மாற்ற முயற்சிக்கிறார்,” என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2008- ஆம் ஆண்டில், அரசாங்கத்தை கவிழ்க்க தனக்கு போதுமான நாடாளுமன்ற ஆதரவு இருப்பதாக அன்வார் கூறியதோடு, அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை அதிகாரத்தை அமைதியான முறையில் விககுமாறு வலியுறுத்தினார்.

சிறப்பு மக்களவை அமர்வுக்கு அழைப்பு விடுக்கும் திட்டம் அப்துல்லாவால் நிராகரிக்கப்பட்ட பின்னர் தாம் தோல்வியடைந்ததாக அன்வார் அப்போது கூறினார்.

அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் கூறுகையில், அன்வாரின் கூற்றால் ஆச்சரியப்பட்டு, தேசிய கூட்டணி ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டதாகக் கூறினார்.

“எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். எந்த பிரச்சனையும் இல்லை. அன்வார் தனது பெரும்பான்மையை எங்கிருந்து பெறுகிறார் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை ”

சனிக்கிழமையன்று தேசிய கூட்டணியை நிராகரிக்க சபா வாக்காளர்களின் முடிவை மாற்ற இது ஒரு வித்தை என்று ஷாஹிடான் கூறுகிறார்.

பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், அன்வாரை இந்த விஷயத்தை மக்களவைக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

“அவரிடம் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவது போதாது. நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் எதையும் சொல்ல முடியும், ஆனால் அவர் மக்களவை தொடங்குவதற்கு காத்திருக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

பிரதமர் மொகிதின் யாசின் “அரசியல் சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தாஜுடின் வலியுறுத்தினார். மக்கள் ஒருமுறை முடிவு செய்ய, விரைவாக திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின், டுவிட்டர் பதிவொன்றில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதை முடித்துவிட்டதாகவும், “எதுவும் வீழ்ச்சியடையவில்லை” என்றும் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, புதிய அரசாங்கத்தை உருவாக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

“நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவை தேசிய கூட்டணியின் அங்கக் கட்சிகள் அல்ல. தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே.

அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முடிவு செய்ததாகவும், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவதை, அம்னோ, தேசிய முன்னணிக்குத் தடுக்க உரிமையில்லை”

“பல அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.