கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 23) நண்பகல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு வலுவான நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பத்தாக அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் எல்லா அரசியல் ஆய்வாளர்களுக்கும் மண்டைக் குடைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு கணக்கைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்வாரின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்தக் கட்சியினர் அவரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒவ்வொருவரும் கணக்குப் போடும் கணக்குப் பொறியைக் (கால்குலேட்டர்) கொண்டு கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், அன்வாரின் ஆதரவுத் தளம் அம்னோவிலிருந்து கிடைக்கிறது என ஊகங்கள் நிலவி வந்தன. நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹாமிடி இருவரும் அன்வாரை ஆதரிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது.
இதை வெட்ட வெளிச்சமாக்கும் வண்ணம் முதல் மறைமுக அறிகுறியைத் தந்திருக்கிறார் சாஹிட் ஹாமிடி.
அம்னோ-தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிக்க விரும்புகிறார்கள்- அதைத் தடுக்க மாட்டோம் என அறிவித்திருக்கிறார்.
அன்வாரின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் சாஹிட்டின் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
அன்வாரை ஆதரிக்கும் அம்னோ-தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவை மதிக்கிறோம் என்றும் சாஹிட் தெரிவித்தார்.
“அம்னோவும், தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இல்லை. தேசியக் கூட்டணிக்கான ஆதரவு தனித் தனி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பொறுத்தது” என்றும் சாஹிட்டின் அறிக்கை குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து அம்னோவின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிக்கிறார்கள் என்பதும், அதில் சாஹிட் உள்ளிட்டவர்களும் அடங்குவர் என்பதும் தற்போது பகிரங்கமாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.