Home One Line P1 சபா : யார் முதலமைச்சர்? திரைமறைவில் பேச்சுவார்த்தைகள்!

சபா : யார் முதலமைச்சர்? திரைமறைவில் பேச்சுவார்த்தைகள்!

592
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : நேற்று நடைபெற்ற சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையின்படி 38 தொகுதிகளை ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெற்றுள்ளது.

ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் கூட்டணி 32 தொகுதிகளை பெற்றிருக்கின்றது. எஞ்சிய 3 தொகுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.

அடுத்த சபா முதலமைச்சர் யார் என்பதில் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக தொடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

ஜிஆர்எஸ் கூட்டணி 38 தொகுதிகளை வென்று இருந்தாலும் பிரித்துப் பார்க்கும் பொழுது அதில் சில கட்சிகள் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றன.

மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணி 24 தொகுதிகளை வென்று இருக்கின்றது.

இதில் பெர்சாத்து கட்சி கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது.

தேசிய கூட்டணி  சார்பில் போட்டியிட்ட ஸ்டார் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக தேசியக் கூட்டணி சின்னத்தில் வெற்றி காணப்பட்ட தொகுதிகள் 17 ஆகும்.

தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிபிஎஸ்  7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. இந்தக் கட்சியும் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆக மொத்தம் 24 தொகுதிகளை தேசியக் கூட்டணி கொண்டிருக்கிறது.

தேசியக் கூட்டணியில் இணைந்திருக்கும் ஸ்டார், பிபிஎஸ் இரண்டும் அம்னோவுடன் ஒத்துப் போகாத கட்சிகள்.

தேசிய கூட்டணி பக்கம் 24 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணி 14 தொகுதிகளை வென்று இருக்கின்றது. இந்த 14 தொகுதிகளையும் அம்னோ மட்டுமே வென்றிருக்கிறது. அதனுடன் இணைந்து போட்டியிட்ட மசீச, பிபிஆர்எஸ், எஸ்ஏபிபி ஆகிய கட்சிகள் எந்தத் தொகுதியையும் வெற்றி கொள்ளவில்லை.

இப்போது எழுந்துள்ள கேள்வி அம்னோ-தேசியக் கூட்டணியின் முதல் அமைச்சர் யார் என்பதுதான்!

தேசியக் கூட்டணி முதலமைச்சருக்கு 14 தொகுதிகளைக் கொண்டிருக்கும் அம்னோ ஆதரவளிக்குமா?

அல்லது அம்னோ முதலமைச்சர் ஒருவருக்கு 24 தொகுதிகளைக் கொண்ட தேசியக் கூட்டணி ஆதரவளிக்குமா?

அம்னோ முதலமைச்சர் வேண்டாம் என்றால் ஸ்டார், பிபிஎஸ் கட்சிகள் தேசியக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளுமா?

அம்னோவுக்கும், மொகிதினின் தேசியக் கூட்டணிக்கும் இடையில் அண்மையில் அன்வார் இப்ராகிமின் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் மோதல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சபா மாநிலத்தில் அவர்கள் ஒன்றுபட்டு அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்களா?

சுயேச்சை வேட்பாளர்கள் எந்தப்பக்கம் சாய்வார்கள் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 3 சுயேச்சைகளும் ஷாபி அப்டாலுக்கு ஆதரவு தெரிவித்தால் அவரது வாரிசான் பிளஸ் பலம் 35 ஆக உயரும்.

ஆட்சி அமைக்க இந்தப் பலம் போதாது என்றாலும், பிபிஎஸ், ஸ்டார் போன்ற கட்சிகள் தங்களின் பலத்தை ஷாபிக்கு வழங்கினால், அவரால் ஆட்சி அமைக்க முடியும்.

வழங்குவார்களா என்பதுதான் கேள்வி!

இத்தகையக் குழப்பங்களோடு புதிய கூட்டணிகள், புதிய கட்சி தாவல்கள் சபா அரசியலில் அரங்கேறுமா என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திரைமறைவு அரசியல் பேச்சுவார்த்தைகளின் முடிவில் தெரிய வரும்!

-இரா.முத்தரசன்