கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 293 ஆக பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
நேற்றைய எண்ணிக்கையான 317 என்பதோடு ஒப்பிடும்போது இது குறைவு என்றாலும் மூன்று இலக்க எண்ணிக்கையில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரையில் பதிவான இரண்டாவது மிக அதிகமான ஒருநாள் எண்ணிக்கையாகும்.
இவற்றில் ஒரே ஒரு சம்பவம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். மற்ற 292 தொற்றுகளும் உள்நாட்டிலேயே காணப்பட்டவையாகும்.
இதைத் தொடர்ந்து மலேசியாவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 12,381 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 67 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,283 ஆக உயர்ந்தது.
இன்னும் 1,961 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 28 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
ஒரே ஆறுதலான விஷயம் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் மரணமடையவில்லை என்பதுதான். இதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 137-ஆக உள்ளது.
மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக சபாவும், கெடாவும் இருக்கின்றன.
சபாவில் 126 தொற்றுகளும், கெடாவில் 113 தொற்றுகளும் பதிவு செய்யப்பட்டன. மூன்றாவது நிலையில் சிலாங்கூர் உள்ளது. இங்கு 31 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இன்றைய புதிய தொற்றுகளில் 30, சபாவில் இருந்து மேற்கு மலேசியா திரும்பியவர்களின் மூலம் பரவியதாகும். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 20 தொடங்கி இன்று வரையில் 206 தொற்றுகள் சபாவில் இருந்து திரும்பியவர்களால் பரவியிருக்கிறது.
இதற்கிடையில் இரண்டு புதிய தொற்றுத் திரள்களும் அடையாளம் காணப்பட்டன. சபாவில் ஒன்றும் சிலாங்கூரில் ஒன்றும் என இரண்டு புதிய தொற்றுத் திரள்கள் அடையாளம் காணப்பட்டன.