கோலாலம்பூர், ஏப்ரல் 16- தேசிய முன்னணியின் கீழ் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) சார்பாக நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வேட்பாளரும், சட்டமன்றம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும், வரும் மே 5 ஆம் தேதி போட்டியிடவுள்ளனர் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ கேவியஸ் அறிவித்தார்.
கோலாலம்பூரில் அமைந்துள்ள கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வேட்பாளரும் அதனை தொடர்ந்து மலாக்கா, சிலாங்கூர், பேரா மற்றும் கிளந்தான் மாநிலங்களில் நான்கு சட்டமன்றங்களிலும் பிபிபி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி இந்த ஐந்து தொகுதிகளிலும் தோல்வி கண்டது.
கடினமானதாக தோன்றினாலும், பிபிபி கட்சியைச் சார்ந்தவர் இம்முறை எதாவது தொகுதியில் போட்டியிட வேண்டும். ஐந்து தொகுதிகளையும் பெறுவது என்பது பிபிபி கட்சிக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும்.” என்று சமூக வலைத் தளமான டுவீட்டரில் கேவியஸ் தெரிவித்தார்.
கடந்த 12ஆம் பொதுத் தேர்தலில், தைப்பிங் நாடாளுமன்ற தொகுதியிலும் பாசிர் பெர்டாமார் மாநில தொகுதியிலும் போட்டியிட்டு பிபிபி கட்சி தோல்வி கண்டது.
ஜசெக கட்சியைச் சார்ந்த நங்கா கோர் மிங்குடன் போட்டியிட்ட டத்தோ கேவியஸ் 11,298 வாக்குகள் வித்தியாசத்தில் மோசமான முறையில் தோல்வி கண்டார்.
பாசிர் பெர்டாமார் தொகுதியில் போட்டியிட்ட ஜசெக கட்சியைச் சார்ந்த சியா லியோங் பெங்குடன் போட்டியிட்ட பிபிபி கட்சியைச் சேர்ந்த லீ எங் 7,914 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதே போல, கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக கட்சி வேட்பாளர் டாக்டர் தான் செங் கியாவுடன் போட்டியிட்ட தேசிய முன்னணியைச் சார்ந்த கெராக்கான் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட லாவ் ஹோய் கியோங் 23,848 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.