கோலாலம்பூர்: இந்திரா காந்திக்கு ஆதரவு அளிக்கும் அமைப்பான ‘இங்காட்’ , அவரது மகள் பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிக்க, உள்துறை அமைச்சரின் உதவியை நாடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திரா காந்தி அதிரடி குழு (இன்காட்) தலைவர் அருண் துரைசாமி இதனை தெரிவித்தார். இந்த வழக்கை தீர்க்க காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் “தயக்கம்” காட்டுவது காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“இந்த நேரத்தில், காவல் துறைத் தலைவருடன் இங்காட் மற்றொரு சந்திப்பை நாடாது. உள்துறை அமைச்சர் அல்லது பிரதமரை நாங்கள் நேரடியாகக் கையாள்வோம், ” என்று அருண் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“ஒரு தாய் 11 ஆண்டுகளாக (மகளை பார்க்க) காத்திருக்கிறார். அவர் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்? ”
பிரசன்னா டிக்சாவைக் கண்டுபிடிப்பதற்காக காவல் துறையினர் உருவாக்கிய சிறப்பு பணிக்குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று அருண் கூறினார்.
“செப்டம்பர் 3- ஆம் தேதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து காவல் துறைத் தலைவருடனான சந்திப்புக்காக நாங்கள் புக்கிட் அமானுக்குச் சென்றோம், ஆனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கு எந்த புதுத் தகவலும் வழங்கப்படவில்லை. பணிக்குழுவை அமைத்த போதிலும் அவரது மகளை திருப்பி அனுப்ப எந்த திட்டமும் இல்லை என்று தெரிகிறது. ” என்று அவர் கூறினார்.
விசாரணை தொடர்பாக “நிறைய தகவல்கள்” புழக்கத்தில் இருப்பதாக அவர் கூறினார், ஆனால், பணிக்குழு அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
“மூன்றாம் தரப்பு ரிட்சுவானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. மூன்றாம் தரப்பு யார்? பணிக்குழு ஏன் அதைப் பற்றி அறியவில்லை? ” என்று அவர் கேட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு கடிதத்தை வழங்குவதற்காக இந்திரா காந்தி புத்ராஜெயாவுக்கு 12 நாட்கள் 350 கி.மீ. நடக்கப்போவதாக நேற்று அருண் தெரிவித்திருந்தார். அவர் வருகிற நவம்பர் 21-ஆம் தேதி நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயா செல்லும் வழியில் மாமன்னருக்கு மனு ஒன்றை வழங்குவதாக இங்காட் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார். மேலும், பிரசன்னா டிக்சாவின் இருப்பிடத்தை தெரிவிப்பவருக்கு வெகுமதியாக 50,000 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் அருண் நேற்றைய சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திராவின் மகள் பிரசன்னா டிக்சாவை அவரது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா 2009- இல் இஸ்லாமிற்கு மாற்றி அழைத்துச் சென்றார். பிரசன்னா அப்போது 11 மாத வயதுக் குழந்தை.
பிரசன்னா டிட்சாவை இந்திராவிடம் திருப்பித் தருமாறு நீதிமன்றங்கள் ரிட்சுவானுக்கு உத்தரவிட்டிருந்தன. ஆனால், அவர் காணப்படவில்லை. அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
ரிட்சுவான் மற்றும் பிரசன்னாவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக கடந்த மாதம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.