கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 354 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் ஒன்பதாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
188 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,707- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
354 புதிய சம்பவங்களின்படி, நாட்டில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 14,772- ஆக உள்ளது என்று அவர் கூறினார்.
மொத்தம் 3,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 68 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 25 பேருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.
இன்று புதிதாக ஆறு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கை 152- ஆக அதிகரித்துள்ளது. நேற்று, ஐவர் இந்த தொற்றால் மரணமுற்றனர். முன்னதாக, சபாவில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம் என்று நூர் ஹிஷாம் தெரிவித்திருந்தார். எந்த தொற்றுக் குழுவிலும் சம்பந்தப்படாதவர்களுக்கு தொற்று ஏற்படுவது கவலைக்குரியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சபாவில் அதிகமாக 274 சம்பவங்கல் பதிவாகி உள்ளன. கெடாவில் 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 24 சம்பவங்களும், கோலாலம்பூரில் 10 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.