அலோர் ஸ்டார்: மஇகா, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், மாநில அரசாங்கத்தில் நியமனம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப கட்சியின் கூட்டணி வாயிலாகப் பேச வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி நோர் கூறினார்.
இந்த விவகாரத்தில் மஇகா நேரடியாக பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்றது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
“மஇகா ஒரு தேசிய முன்னணி கட்சி. அவர்கள் தேசிய முன்னணியுடன் பேச வேண்டும், பாஸ் உடன் அல்ல,” என்று அவர் கூறினார்.
“முவாபாக்காட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி ஆகியவற்றில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான அரசியல் முடிவுகள் மத்திய மட்டத்தில் எடுக்கப்பட்டு செயல்படுத்த மாநிலத்திற்கு ஒப்படைக்கப்படுகின்றன.
“எல்லாவற்றிற்கும் மேலாக, மஇகா தேசிய முன்னணியின் ஒரு அங்கமாகும். அவர்கள் தேசிய முன்னணி அல்லது அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மஇகவின் உரிமைகள் மற்றும் விருப்பங்கள் தேசிய முன்னணி வழியாக செல்ல வேண்டும். எந்தவொரு முடிவும் கெடா பாஸ் எடுக்க இயலாது, மத்தியில் எடுக்கப்பட வேண்டும்” என்று சனுசி மீண்டும் கூறினார்.
முன்னதாக, தேசிய கூட்டணி கட்சிகளின் நட்புறவைப் பேணாது, கெடா மாநில பாஸ் கட்சி நட்புறவின் மனப்பான்மையை அவமதிப்பதாக கெடா மாநில மஇகா தலைவர் எஸ்.ஆனந்தன் கூறியிருந்தார்.
கெடா மாநில பாஸ் கட்சி சபா மாநில அரசாங்கத்தின் முன்மாதிரியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது, பிற கட்சிகளை மதிக்கும் தன்மையைக் கொண்டது என்று அவர் கூறியிருந்தார்.
“சபா மாநில சட்டமன்ற தலைமையில் இணைய பாஸ் தலைமைக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் சபா மாநில அரசு காட்டிய திறந்த அணுகுமுறையை நான் மதிக்கிறேன். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பாஸ் தலைவர்கள் இந்த நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
“இருப்பினும், பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு, சபா அரசாங்கத்தின் அணுகுமுறையிலிருந்து மிகவும் வேறுபட்டது. இது மற்ற கட்சிகளுக்கு அதன் தலைமையில் இணைய நேரடி வாய்ப்புகளை வழங்க மறுக்கிறது” என்று அவர் கூறினார்.
மாநில அரசாங்க நியமனங்களில் தேசிய முன்னணி பிரதிநிதிகளை ஓரங்கட்டுவதன் மூலம் மாநில அரசு சார்புடையதாக விமர்சிக்கப்படுகிறது.
பாஸ் கட்சி பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்று அவர் விமர்சித்தார்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராமத் தலைமைக் குழு (ஜே.கே.கே.கே), அரசாங்க நிறுவன நியமனங்கள், இந்தியத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தின் சிறப்பு ஆலோசகர்கள் போன்ற நியமனங்களில் பாஸ் கட்சி, மஇகா மற்றும் தேசிய முன்னணியை ஒதுக்கி உள்ளது.
” கெடா அரசாங்கம் இந்த விஷயத்தில் சபா அரசாங்கத்தைப் போலவே திறந்த மனதுடன், தொலைநோக்குடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தேர்தல்களில் அரசாங்க இயந்திரங்களை வலுப்படுத்துவதில் மஇகாவும் தனது பங்கை வகிக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.