நியூயார்க் : மலேசியாவின் 1எம்டிபி ஊழல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரும், நிதி திரட்டாளருமான எல்லியட் புரோய்டி என்ற நபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மில்லியன் கணக்கான தொகையைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு கிழக்கு ஆசியாவில் வாழும் ஒரு பணக்கார வணிகருக்கு எதிரான விசாரணைகளை நிறுத்திக் கொள்வதற்காக டொனால்ட் டிரம்பையும், அமெரிக்க நீதித் துறையையும் வற்புறுத்துவதற்கு எல்லியட் ஒப்புக் கொண்டார் என்றும் ஆவணங்கள் குறிப்பிட்டன.
அந்தப் பணக்கார வணிகர் மலேசியாவின் 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றினார் என்றும் ஆவணங்கள் மேலும் தெரிவித்தன.
எதிர்வரும் அக்டோபர் 20-ஆம் தேதி எல்லியட் புரோய்டி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லியட் புரோய்டி ஓர் அமெரிக்க வணிகராவார். 2016-ஆம் ஆண்டில் டிரம்புக்கான பிரச்சாரக் குழுவில் நிதி நிர்வாகப் பொறுப்புகளை அவர் வகித்தார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டிரம்பின் பதவியேற்புக்கான ஏற்பாட்டுக் குழுவிலும் அவர் அங்கம் வகித்தார்.
எதிர்வரும் நவம்பர் 3 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பின்தங்கி வருகிறார் எனத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டிரம்புடன் தொடர்புடைய சிலர் நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
எல்லியட் புரோய்டி எந்த வணிகருக்காக இத்தகைய முயற்சிகளை கட்டணம் பெற்றுக் கொண்டு எடுத்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் அந்த வணிகர் ஜோ லோ என கணிக்கப்படுகிறது.
4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை 1எம்டிபி மூலமாக கையாடிய குற்றத்திற்காக ஜோ லோ அமெரிக்காவிலும், மலேசியாவிலும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கிறார்.
வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்களுக்காக அமெரிக்க அரசாங்கத்திடம் இத்தகைய பிரச்சாரங்கள் செய்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் அவ்வாறு செய்ய விரும்புபவர்கள் முதலில் இதற்கான பதிவகத்தில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.
ஜோ லோ, எல்லியட் புரோய்டியிடம் தன் மீதான விசாரணைகளை நிறுத்துவதற்காக முதல் கட்டமாக 6 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியிருக்கிறார் என மற்றொரு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தன்மீதான விசாரணைகளை நிறுத்துவதில் எல்லியட் புரோய்டி வெற்றி பெற்றால் மேலும் கூடுதலாக 75 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஜோ லோ ஒப்புக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எல்லியட் புரோய்டி தனது சேவைகளுக்காக அரசாங்கத்திடம் முன்கூட்டியே பதிந்து கொள்ளவில்லை என்பதால் அவர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருக்கிறார்.
எல்லியட் புரோய்டி டிரம்புக்கும் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் இடையில் கோல்ப் விளையாட்டு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், அத்தகைய கோல்ப் சந்திப்பு நடைபெறவில்லை
2017 மே மாதத்தில் எல்லியட் புரோய்டி சீனாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஜோ லோவையும் சில சீன அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்திருக்கிறார். உயர்மட்ட அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் தனக்குள்ள செல்வாக்கு குறித்தும் அவர்களைத் தன்னால் முடிவுகள் எடுக்க வைக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
முதல் கட்ட 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பிறகு மேலும் கூடுதலாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் தனது பணிகளுக்காகப் பெற்றிருக்கிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லியட் புரோய்டி இதே போன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
அரசாங்க ஓய்வூதிய நிதியிலிருந்து 250 மில்லியன் டாலரை தான் நடத்தும் புரோய்டி ஃபண்ட் (நிதி) என்ற நிதி அமைப்புக்கு வழங்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு எல்லியட் புரோய்டி 1 மில்லியன் டாலர்களை சட்டவிரோதமாக வழங்கினார் என்ற குற்றச்சாட்டை அப்போது அவர் எதிர்நோக்கினார்.
எனினும் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்காக அரசாங்க வழக்கறிஞர்களுடனும் விசாரணையாளர்களுடனும் அவர் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டன.