இலண்டன் : மலேசியாவின் 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து கையாடல்கள் மூலம் களவாடப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை மீட்க அமெரிக்க சட்டத்துறை அலுவலம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் பிரிட்டனில் பதுக்கப்பட்டிருக்கும் மேலும் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை மீட்கும் முயற்சியை அமெரிக்க சட்டத்துறை அலுவலகம் தொடக்கியுள்ளது.
1எம்டிபி நிறுவனத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்வரை பல்வேறு முறைகேடான வழிகளில் களவாடப்பட்டிருப்பதாக, மலேசிய அமெரிக்கா அரசாங்க அதிகாரிகள் கணித்திருக்கின்றனர்.
இதன் தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது ஏற்கனவே 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
1எம்டிபியின் நிதி ஆலோசகராக செயல்பட்ட கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனமும் பில்லியன் டாலர் கணக்கிலான இழப்பீட்டை ஏற்கனவே மலேசியாவுக்கு வழங்கியிருக்கிறது.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) கலிபோர்னியா மாநில மத்திய வட்டார நீதிமன்றத்தில் ஒரு புகார் சமர்ப்பிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அந்த 300 மில்லியன் டாலர் சொத்துகள் பிரிட்டனில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் முறைகேடான முறையில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
வெனிசுலா அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசுலா என்ற நிறுவனம் பெட்ரோ சவுதி ஆயில் செர்விசஸ் என்ற நிறுவனத்திற்கு எண்ணெய் தோண்டும் திட்டத்திற்காகக் கடன்கள் வழங்கியிருக்கிறது.
இந்தக் கடன்களைக் கையாண்ட விதத்தில்தான் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்க சட்டத்துறை நம்புகிறது.
1எம்டிபியிலிருந்து களவாடப்பட்ட பணத்திலிருந்து சுமார் 4 மில்லியன் டாலர்களைப் பயன்படுத்தி ரிசா அசிஸ் நான்கு திரைப்பட விளம்பரப் பதாகைகளை வாங்கியிருக்கிறார் எனவும் அமெரிக்க சட்டத்துறை அலுவலகம் கூறியிருக்கிறது.
ஆனால் மலேசியாவிலோ ரிசா அசிஸ் மீதிலான 1எம்டிபி தொடர்பான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு பெரும் தொகையை அவர் மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கடந்த புதன்கிழமையோடு சமர்ப்பிக்கப்பட்ட புகாரோடு சேர்த்து இதுவரையில் அமெரிக்கா மீட்டிருக்கும் 1 எம்டிபி தொடர்புடைய சொத்துகளின் மதிப்பு 2.1 பில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க சட்டத்துறை அலுவலகம் மீட்ட மிகப் பெரிய சொத்து மதிப்பு இதுவே எனக் கணிக்கப்படுகிறது.
மலேசியா இதுவரையில் 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை மீட்பதற்கும் அமெரிக்கா உதவி புரிந்துள்ளது.