Home One Line P1 கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

1155
0
SHARE
Ad

(“செல்லியல் பார்வை காணொலி” தளத்தில் 18 செப்டம்பர் 2020-ஆம் நாள் பதிவேற்றம் கண்ட  காணொலிப் பதிவின் கட்டுரை வடிவம் )

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். அவரது தாயார் சியாமளா கோபாலன் குறித்து நிறைய பேசப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. கமலா ஹாரிசே மறைந்த தனது தாயார் குறித்து பல தடவை மேடைகளில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

பேட்டிகளின்போது தாயாரின் தியாகங்களை நெகிழ்ச்சியுடன் விவரித்திருக்கிறார்.

ஆகக் கடைசியாக ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போது கூட தனது தாயாரின் போராட்ட வாழ்க்கை குறித்துப் பேசினார் கமலா.  தன்னையும் தனது தங்கை மாயா ஹாரிசையும் அவர் வளர்த்த விதம் குறித்தும் உருக்கமாகவும், நெகிழ்ச்சியுடனும் விவரித்தார்.

#TamilSchoolmychoice

கமலாவின் பெயரில் ஒரு பாதியாக இருப்பது ஹாரிஸ் என்பது. அவரது தந்தையின் பெயர் டொனால்ட் ஹாரிஸ் . ஆனால் அவர் குறித்து கமலா இதுவரையில் பகிரங்கமாக எதனையும் கூறியதில்லை. அவர்களுக்கிடையிலான உறவு குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை.

கமலா பெற்றோர்களின் விவாகரத்து

கமலாவின் பெற்றோர்கள் சியாமளா – டொனால்ட் ஹாரிஸ்

அண்மையில் கமலாவின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் குறித்து நியூயார்க் டைம்ஸ் சில விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

1972-ஆம் ஆண்டில் சியாமளா கோபாலனுக்கும் டொனால் ஹாரிசுக்கும்  இடையிலான விவாகரத்து வழக்கு நடைபெற்றது. அப்போது கமலாவும் அவரது தங்கையும் இளம் வயதினர்.

கமலாவுக்கு அப்போது எட்டே வயதுதான்!

இரண்டு மகள்களை யார் வசம் வைத்திருப்பது என்பது குறித்து எழுந்த சட்டப் போராட்டங்கள் எழுந்ததாக கமலாவின் தந்தை கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்த மோதல்களால் தனது மகள்களுடனான நெருக்கமான உறவு திடீரென முறிந்தது என அவர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 81 வயதாகும் டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். பொருளாதாரப் பேராசிரியர். பொருளாதாரம் படிக்க அமெரிக்கா வந்தவர்.

கமலாவின் தாயார் சியாமளா தனது 19-வது வயதில் தமிழ் நாட்டிலிருந்து உயர் கல்வியைத் தொடர்வதற்காக அமெரிக்கா வந்தார். கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தில் டொனால்ட் ஹாரிசைச் சந்தித்து காதல் வயப்பட்டார் கமலா.

1960-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டிருந்தன மனித உரிமைகளுக்கான போராட்டங்கள். அந்தப் போராட்டக் களத்தில் ஈடுபட்டபோதுதான் தனது பெற்றோர்கள் காதலால் இணைந்தனர் என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.

இளம் வயதிலேயே தனது தாயார் விவாகரத்து பெற்றாலும் தன்னையும் தனது தங்கையையும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அவர் வளர்த்ததை நெகிழ்ச்சியுடன் நினைவுபடுத்தினார் கமலா.

81 வயதான கமலாவின் தந்தை டொனால்ட் ஹாரிசோ தனது பேராசிரியர் பொறுப்பிலிருந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார்

டொனால்ட் ஹாரிஸ் நீண்ட காலமாக பகிரங்க அறிவிப்புகள் எதனையும் வெளியிடாது அமைதி காத்து வருகிறார். தனது மகள் அமெரிக்க அரசியல் அரங்கில் உச்ச கட்டத்திற்குச் செல்வதை பின்னணியில் இருந்து அமைதியாகக் கவனித்து வருகிறார் டொனால்ட் ஹாரிஸ்.

பிரிந்துவிட்டாலும் எனது மகள்கள் மீதான எனது அன்பை நான் இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை – தந்தை என்ற முறையிலான கடமைகளில் இருந்து தவறவில்லை – என ஹாரிஸ் 2018 பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

தனது மகளுக்காகப் பெருமைப்படுவதாகவும் அதே வேளையில் பிரிவினையால் ஏற்பட்ட கசப்புகளைக் கொண்டிருப்பதாகவும் டொனால்ட் ஹாரிஸ் கூறியிருக்கிறார்.

கமலா ஹாரிசின் தமிழ் நாட்டுப் பின்னணி

சரி! கமலாவின் தாயார் சியாமளா கோபாலனின் தமிழ்நாட்டுப் பின்னணி என்ன?

கமலாவின் தாயார் சியாமளாவின் தந்தை பெயர் பிவி கோபாலன். தமிழ் நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

1911-ஆம் ஆண்டில் பைங்கா நாடு கிராமத்தில் பிறந்த கோபாலன், ராஜம் என்பவரை மணந்தார்.

கோபாலன் துளசேந்திரபுரத்தில் ஓர் எழுத்தராக (ஸ்டெனோகிராபர்)  ஆங்கிலேய அரசின் கீழ் வேலை செய்து வந்தவராவார்.

துளசேந்திரபுரத்தில் உள்ள கமலா ஹாரிசின் குலதெய்வ ஆலயமான தர்ம சாஸ்தா ஆலயத்தில் அவரது வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் தற்போது நடத்தப்படுகின்றன.

அந்த ஊரைச் சுற்றி கமலாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகள் –ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஒருமுறை, தாத்தா கோபாலனின் 80-வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கமலா ஹாரிஸ் சென்னை வந்து, தனது உறவினர்களுடன் கொ்ண்டாடி மகிழ்ந்தார்.

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்த தனது தாத்தா கோபாலனோடு கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்தபோது அவர் கூறிய அறிவுரைகள் தனக்கு எப்போதுமே மனதில் இருப்பதாகவும் கமலா தெரிவித்திருக்கிறார்.

தாத்தாவின் வழிகாட்டுதல்களும் தனக்கு எப்போதுமே துணைநின்றன என கமலா தனது வாழ்க்கை வரலாற்று நூலில் நினைவு கூர்ந்துள்ளார்.

1998-ஆம் ஆண்டில் கோபாலன் காலமானார்.

கமலாவின் தாயார் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்

புற்றுநோய் ஆராய்ச்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு புகழ் பெற்றவர் கமலாவின் தாயார் சியாமளா கோபாலன். அதே புற்றுநோய் தாக்கத்தால் 2009-இல், தனது 70-வது வயதில் அவர் காலமானார் என்பது கமலா ஹாரிசின் வாழ்க்கைச் சோகங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் பைங்காபுரத்தில் தொடங்கிய ஒரு தலைமுறையிலிருந்து உதித்த கமலா ஹாரிசின் வாழ்க்கைப் பயணம் இன்றைக்கு வெள்ளை மாளிகையின் வாசல் வரை அவரை கைப்பிடித்து அழைத்து வந்திருக்கிறது.

உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் ஜமைக்காவில் இருந்து தொடங்குகின்றது கமலாவின் தந்தை டொனால்ட் ஹாரிசின் தலைமுறை!

அந்த இரண்டு தலைமுறைகளின் பிரதிநிதியாக அமெரிக்க துணையதிபர் வேட்பாளராக களத்தில் நிற்கிறார் கமலா ஹாரிஸ்!

தனது முதுமையான வயதில் தனது மகளுடனான உறவு நெருக்கமாக இல்லாமல், முறிந்து விட்டாலும்  கமலா துணையதிபராவாரா என தந்தைக்கே உரிய பாசத்துடன் காத்திருக்கிறார் டொனால்ட் ஹாரிஸ்!

-இரா.முத்தரசன்

மேற்காணும் செல்லியல் பார்வை கட்டுரையின் காணொலி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: