வாஷிங்டன் : ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தாயார் சியாமளா கோபாலன் குறித்து நிறைய பேசப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. கமலா ஹாரிசே மறைந்த தனது தாயார் குறித்து பல தடவை உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
ஆகக் கடைசியாக ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போது கூட தனது தாயாரின் போராட்ட வாழ்க்கை குறித்தும் தன்னையும் தனது தங்கையையும் அவர் வளர்த்த விதம் குறித்தும் உருக்கமாகவும், நெகிழ்ச்சியுடனும் விவரித்தார் கமலா ஹாரிஸ்.
ஆனால், அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் குறித்து கமலா இதுவரையில் பகிரங்கமாக எதனையும் கூறியதில்லை.
இந்நிலையில் அண்மையில் டொனால்ட் ஹாரிஸ் குறித்து எழுதிய சிறப்புக் கட்டுரையில் நியூயார்க் டைம்ஸ் சில விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
1972-ஆம் ஆண்டில் சியாமளா கோபாலனுக்கும் தனக்கும் இடையிலான விவாகரத்து வழக்கின்போது இரண்டு மகள்களை யார் வசம் வைத்திருப்பது என்பது குறித்து எழுந்த சட்டப் போராட்டங்கள் எழுந்ததாக அவர் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்த மோதல்களால் தனது மகள்களுடனான நெருக்கமான உறவு திடீரென முறிவுக்கு வந்தது என அவர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது 81 வயதாகும் டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். பொருளாதாரப் பேராசிரியர். பொருளாதாரம் படிக்க அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
சியாமளா தனது 19-வது வயதில் இந்தியாவிலிருந்து உயர் கல்வியைத் தொடர்வதற்காக அமெரிக்கா வந்தார். புற்றுநோய் ஆராய்ச்சியாளரான அவர் தனது வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் ஒழிப்புக்காக போராடினார். ஆனால் 2009-ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கே பலியானார்.
அண்மையில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் தனது உரையின் முக்கியப் பகுதியாக தனது தாயார் சியாமளா கோபாலன் ஹாரிஸ் குறித்து புகழாரம் சூட்டினார் கமலா ஹாரிஸ்.
19-வது வயதில் உயர்கல்வி பெறுவதற்காக தனது தாயார் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்ததையும் அங்கு கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தனது தந்தையார் டொனால்ட் ஹாரிசைச் சந்தித்து அமெரிக்க மரபுப்படி காதல்வயப்பட்டதையும் கமலா நினைவு கூர்ந்தார். 1960-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டிருந்த மனித உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் தனது பெற்றோர்கள் இணைந்தனர் என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.
தனது இளம் வயதிலேயே தனது தாயார் விவாகரத்து பெற்றாலும் தன்னையும் தனது தங்கையையும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் வளர்த்ததையும் நெகிழ்ச்சியுடன் தனது உரையில் நினைவுபடுத்தினார் கமலா.
தனது பேராசிரியர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் டொனால்ட் ஹாரிஸ் நீண்ட காலமாக பகிரங்க அறிவிப்புகள் எதனையும் வெளியிடாது அமைதி காத்து வருகிறார். தனது மகள் அமெரிக்க அரசியல் அரசியல் உச்ச கட்டத்திற்குச் செல்வதை பின்னணியில் இருந்து அமைதியாகக் கவனித்து வந்தார் டொனால்ட் ஹாரிஸ்.
பிரிந்துவிட்டாலும் எனது மகள்கள் மீதான எனது அன்பை நான் இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை – தந்தை என்ற முறையிலான கடமைகளில் இருந்து தவறவில்லை – என ஹாரிஸ் 2018 பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஜமைக்காவின் இணைய ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட பேட்டி ஒன்றிலும் ஹாரிஸ் சில விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.
தனது மகளுக்காகப் பெருமைப்படுவதாகவும் அதே வேளையில் பிரிவினையால் ஏற்பட்ட கசப்புகளைக் கொண்டிருப்பதாகவும் ஹாரிஸ் கூறியிருக்கிறார்.
கமலா ஹாரிஸ் பெற்றோர்கள் செய்து கொண்ட விவாகரத்து கசப்பான மோதல்களோடு முடிந்தது.
தனது உயர்நிலைக் கல்வியை முடித்தபோது பட்டமளிப்பு விழாவுக்கு பெற்றோர்கள் இருவரையும் அழைத்ததையும் கமலா ஒருமுறை நினைவு கூர்ந்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்தும் தான் அவர்களை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்ததாக அவர் கூறியிருந்தார்.
முதலில் இதற்காகத் தனது தாயார் வராமல் போய்விடுவார் என தான் அஞ்சியதாகவும் கமலா தெரிவித்திருந்தார்.