Home One Line P2 டிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு

டிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு

892
0
SHARE
Ad

வாஷிங்டன் : சீனாவின் டிக்டாக் குறுஞ்செயலியைத் தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அந்நிறுவனம் வழக்கு தொடுக்கவிருக்கிறது.

இதற்கான வழக்கை நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) டிக்டாக் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் குறுஞ்செயலியின் உரிமையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 மில்லியன் பயனர்களை டிக்டாக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெறும் வணிகப் போரின் உச்ச கட்டமாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் டிக்டாக் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தனியாக மற்றொரு வழக்கைத் தொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தில் கணினித் துறையில் பணியாற்றும் பேட்ரிக் ரயான் என்பவர் டிக்டாக்கைத் தடை செய்யும் டொனால்ட் டிரம்பின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்.

“நாங்கள் வழக்கு நடத்துவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தவே விரும்புகிறோம். ஆனால் எங்களின் அமெரிக்க வணிகத்தை முழுவதுமாக முடக்கி விட்டு, நாங்கள் உருவாக்கியிருக்கும் 10 ஆயிரம் பணியிடங்களை அழிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே வழக்கு தொடுத்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என டிக்டாக் அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்தது.

அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படுகிறது

சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்த குறுஞ்செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் அடுத்த 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்படவிருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கால அவகாசம் வழங்கி இருக்கின்றார்.

இந்த 45 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி சீனாவின் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டுமென அவர் அவகாசம் வழங்கியிருக்கிறார்.

சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) என்று நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டிருப்பதாலும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் அந்தக் குறுஞ்செயலி தடை செய்யப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நடெல்லாவுக்கும் (படம்) அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை டிக்டாக் மைக்ரோசாப்ட்டுக்கு விற்பனை செய்யப்பட கால அவகாசம் வழங்கி இருக்கின்றார்.

“அமெரிக்க அதிபரின் கவலைகளை மைக்ரோசாப்ட் உணர்ந்திருக்கிறது. டிக்டாக் விற்பனை முழுமையான பாதுகாப்பு மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அமெரிக்காவின் நலன்கள் பாதுகாக்கப்படும். அமெரிக்க நிதியகத்திற்கான பொருளாதார பலன்களும் உறுதி செய்யப்படும்” என மைக்ரோசாப்ட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த விற்பனை ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள டிக்டாக் வணிக செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் வாங்கிக் கொள்ளும்.

டிக்டாக் பயனர்களின் அனைத்து தனிப்பட்ட சொந்த தரவுகளும் அதற்குப் பின்னர் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

மைக்ரோசாப்ட் தொடர்ந்து மற்ற அமெரிக்க முதலீட்டாளர்களை டிக்டாக்கில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும்.

தற்போது, டிக்டாக்கின் உரிமை பெற்றுள்ள நிறுவனமான பைட் டான்சின் முதலீட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தியாவும் ஏற்கனவே டிக் டாக் குறுஞ்செயலியை தடை செய்திருக்கிறது.