கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ளூர் தயாரிப்பாக உருவாகியிருக்கும் “பூச்சாண்டி” என்ற புதியதொரு திரைப்படம் எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியத் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
அண்மையில் ‘பூச்சாண்டி’ தமிழ் திரைப்படத்தின் ‘பூச்சாண்டி வரான்’ இசை காணொலி மற்றும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.
இத்திரைப்படத்தை டிரியூம் ஸ்டுடியோ (TRIUM STUDIO PVT LTD) நிறுவனத்தின் எஸ். எண்டி (ANDY) தயாரிக்க, ஜே. கே. விக்கி இயக்கியிருக்கிறார். ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் விளம்பரப் பாடலான இது உலகத் தமிழ் ஹிப் பாப் இசையின் முன்னோடியும், நம் நாட்டின் இசையுலக நாயகர்களில் ஒருவருமான யோகி.பி அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
எந்திரனும் மனிதனும் இணைந்து பயணம் செய்யும் புதிய உலகத்திலிருந்து தற்போதைய உலகிற்கு வரும் ஒரு நவீன யோகியின் உணர்தல் நிலையே இப்பாடலின் கருப்பொருளாகும்.
இயக்குனர் ஜே.கே. விக்கியின் கற்பனையில் உருவான இப்பாடலை ஆஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் வெற்றியாளரான கணேசன் மனோகரன் இசையமைத்து பாடியுள்ளார்.
மலேசியாவிலேயே முதன் முறையாக சைபர் பங்க் (Cyberpunk) எனும் கருத்துப்படிவத்தில் காட்சியமைக்கப்பட முதல் தமிழ் பாடல் காணொளியான இதில் டி.என்.எக்ஸ் (DNX) நடனக் கலைஞர்கள் துடிப்புமிக்க நடனத்தை வழங்கியுள்ளனர்.
மலேசியாவில் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ‘பூச்சாண்டி’ திரைக்காணவிருக்கிறது.
மலேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே தீபாவளிக்கு திரைக்காணும் முதல் மலேசியத் தமிழ் திரைப்படமும் இதுவே.
திகில் – மர்மம் நிறைந்த இத்திரைப்படத்தின் சுவரொட்டியை (POSTER) ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“பூச்சாண்டி” படத்தின் இசைக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: