கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைப் பரப்பியது குறித்து சாட்சியமளிக்க அன்வார் இப்ராகிமை காவல் துறை அழைத்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு சாட்சியமளிக்க காவல் துறையினர் ஆரம்பத்தில் அன்வாரை அழைத்ததாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார். ஆனால், பிகேஆர் தலைவர் நாளை காலை 9 மணிக்கு மட்டுமே வர இயலும் என்று கூறியதாகத் அவரது செயலாளர் தெரிவித்திருந்தார்.
“எனவே, பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரை காவல் துறை விசாரணையை ஒத்திவைத்துள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 8- ஆம் தேதி ஜெராந்துட் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் நஸ்லான் இட்ரிஸிடமிருந்து புகார் ஒன்றைப் பெற்ற பின்னர், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஹுசிர் கூறினார்.
“இன்றுவரை, 6 புகார் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அண்மையில் பொது ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.”
கடந்த மாதம், அன்வார் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தமக்கு வலுவான மற்றும் உறுதியான ஆதரவு இருப்பதாக அறிவித்தார்.