Home One Line P1 துங்கு ரசாலி கடிதத்திற்கு அசார் அசிசான் பதில்

துங்கு ரசாலி கடிதத்திற்கு அசார் அசிசான் பதில்

733
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணுக்கு  மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா  செப்டம்பர் 25-ஆம் தேதியிட்டு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு, அதன் மீதான விவாதங்களுக்கு வழிவிட வேண்டுமென துங்கு ரசாலி ஹம்சா அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்திற்கு அசார் அசிசான் வழங்கியிருக்கும் பதில் கடிதம் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

துங்கு ரசாலி ஹம்சா
#TamilSchoolmychoice

செப்டம்பர் 29 தேதியிட்ட கடிதத்தில் அசார் அசிசான் துங்கு ரசாலிக்கு வழங்கியிருக்கும் பதிலில் கீழ்க்காணும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன:

  • நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் நாடாளுமன்ற விதிமுறைகள்படி அரசாங்க  மசோதாக்கள், தீர்மானங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • தனிநபர் நாடாளுமன்ற தீர்மானங்கள் இருப்பின் அதைவிட அரசாங்கத் தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற விதி முறையாகும்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் தீர்மானங்கள் அவை சமர்ப்பிக்கப்படும் தேதிவாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டு வரிசைப் படுத்தப்படும்.
  • நாடாளுமன்றத் தீர்மானங்களின் வரிசையை தனக்கு முன்பாக, முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவி வகித்த முகமட் அரிப் யூசோப் தீர்மானித்து, வரிசைப் படுத்திவிட்டுச் சென்றார்.
  • எனவே எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தீர்மானமொன்றை முன்மொழிய விரும்பினால் தனது அலுவலகத்திற்கு முன் அறிவிப்பு மூலம் தெரியப்படுத்தலாம். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி அவை  பரிசீலிக்கப்படும்.
  • வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் அரசாங்க அலுவல்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டால் அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர் விதிமுறை 14(2) -இன்படி எந்த ஒரு தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவாதத்திற்கு விடுவதற்கு அவைத் தலைவர் என்ற முறையில் எனக்கு ஆட்சேபணை இல்லை.
  • எனவே, ஒரு தனிநபர் தீர்மானத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென விரும்பினால் அதை துங்கு ரசாலி, சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானிடம் கோரிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • என்னைப் பொறுத்தவரையில்  மொகிதின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவை  நாடாளுமன்ற விதிமுறைகளின் அடிப்படையில்தான் என்னால் செய்ய முடியும்.

அசார் ஹருணின் பதில் நியாயமானதாக இல்லை – சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுவதாக இல்லை என்பதே சட்ட வல்லுநர்களின் பரவலான கருத்தாக இருக்கின்றது.

எப்போது ஒரு பிரதமரோ, அல்லது ஒரு கட்சியோ, அல்லது ஒரு கூட்டணியோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்டது என நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகிறதோ, அப்போது அந்தத் தீர்மானம்தான் முதலில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும்.

தாங்கள் பெரும்பான்மை கொண்ட சட்டபூர்வமான அரசாங்கம்தான் என நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட பிரதமரும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.

ஆனால், அரசாங்கமும் மொகிதினும் பெரும்பான்மையை இழந்து விட்டனர் என தீர்மானம் முன்மொழியப்பட்டு இருக்கும்போது, அந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு முதலில் விடாமல், பெரும்பான்மையை நிரூபிக்காமல், நாங்கள்தான் அதிகாரபூர்வ அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு ஓர் அரசாங்கம் பதவியில் நீடிப்பது என்பது தவறான முன்னுதாரணம் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அதை உணராமல் சட்டப் பின்புலம் கொண்ட வழக்கறிஞரான அசார் அசிசானும் பெரும்பான்மையை இழந்த ஓர் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்குத்தான் முதலில் நாடாளுமன்றத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.