கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றக் குழு இன்று பிற்பகல் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெர்சாத்து உடனான உறவு கேள்விக்குறியாய் இருக்கும் நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
கொவிட்19 தொற்று அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இயங்கலை வாயிலாக கூட்டம் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பெரிய அறிவிப்பு இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தை யாரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அம்னோவின் முடிவு பல கட்சிகளால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இது நாட்டின் அரசியல் கூட்டணியில் புதிய சீரமைப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் நேற்று அரசியல் பிரிவின் முடிவு குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதிலுமிருந்து கட்சியின் அனைத்து கட்சித் தலைவர்களுடனும், மாநில அம்னோ தலைவர்களுடனும் உச்சமன்றக் குழு சந்திப்புகளை நடத்தும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.
இது இயங்கலை வாயிலாக சனிக்கிழமை நடைபெறும்.
பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக அன்வார் இப்ராகிமை ஆதரிப்பதாகவும், அந்த முடிவை மதிப்பதாகவும், அதைத் தடுக்க இயலாது என்றும் அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி அண்மையில் தெரிவித்திருந்தார்.