கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மற்றொரு தீர்மானத்தின் மூலம் அதற்கு முக்கியத்துவம் அளித்து முதலில் விவாதிக்கலாம் என சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் விளக்கினார்.
இதன்படி அவர் நாடாளுமன்ற விதி 90 (2)-இன் கீழ் ஒரு தீர்மானத்தை அனுப்பியிருப்பதாகக் கூறினார்.
“இந்த தீர்மானத்தின் மூலம், அரசாங்கத்தின் விவகாரங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும், டாக்டர் மகாதீர் முகமட் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தீர்மானத்தை முதலில் படித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் நான் மக்களவையைக் கேட்டுக் கொண்டேன்.”
“இந்த நடவடிக்கையானது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில், தற்போதைய அரசியல் நெருக்கடி சிக்கலைச் சேர்ப்பது அல்ல. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை உண்மையில் அதனை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு முயற்சியாகும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அக்டோபர் 16-ஆம் தேதி, மகாதீரும் அவரது ஆதரவாளர்களும் பெர்சாத்து தலைவர் பெரும்பான்மையை இழந்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
“மக்களவை அரசாங்க விவகாரங்களில் மும்முரமாக இருக்கும். இது ஓர் அரசியலமைப்பு ஜனநாயக அமைப்பில் அரசியல் தந்திரமாகும். பிரதமருக்குத் தெரியும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அவரை ஆதரிக்கவில்லை.
“இருப்பினும், அதே நேரத்தில், பிரதமருக்கு ஆதரவின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தவும், அதே நேரத்தில் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை தீர்மானிக்கவும் இந்த தீர்மானம் முக்கியமானது” என்று அவர் மேலும் கூறினார்.