Home One Line P2 1எம்டிபி ஊழல்: எல்லியட் புரோய்டி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்

1எம்டிபி ஊழல்: எல்லியட் புரோய்டி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்

778
0
SHARE
Ad
எல்லியட் புரோய்டி

வாஷிங்டன் : மலேசியாவின் 1எம்டிபி ஊழல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த எல்லியட் புரோய்டி என்பவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

எல்லியட் புரோய்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆதரவாளரும், நிதி திரட்டாளருமாவார்.

அண்மையில் எல்லியட் புரோய்டி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். வாஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எல்லியட் புரோய்டி மீதான குற்றச்சாட்டுகள் கொண்டவரப்பட்டபோது அவற்றை அவர் ஒப்புக் கொண்டார்.  அயல்நாட்டு பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பில் தான் குற்றமிழைத்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

1எம்டிபி ஊழல் விசாரணையை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதற்காக எல்லியட் மில்லியன் கணக்கான பணத்தைக் கையூட்டாகப் பெற்றார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து எல்லியட்டுக்கு 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தான் பெற்ற 6 மில்லியன் டாலரைத் திரும்பச் செலுத்த அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மில்லியன் கணக்கான தொகையைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு கிழக்கு ஆசியாவில் வாழும் ஒரு பணக்கார வணிகருக்கு எதிரான விசாரணைகளை நிறுத்திக் கொள்வதற்காக டொனால்ட் டிரம்பையும், அமெரிக்க நீதித் துறையையும் வற்புறுத்துவதற்கு எல்லியட் ஒப்புக் கொண்டார் என்றும் எல்லியட் மீது குற்றம் சுமத்தும் ஆவணங்கள் குறிப்பிட்டன.

அந்தப் பணக்கார வணிகர் மலேசியாவின் 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றினார் என்றும் ஆவணங்கள் மேலும் தெரிவித்தன.

எல்லியட் புரோய்டி ஓர் அமெரிக்க வணிகராவார். 2016-ஆம் ஆண்டில் டிரம்புக்கான பிரச்சாரக் குழுவில் நிதி நிர்வாகப் பொறுப்புகளை அவர் வகித்தார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டிரம்பின் பதவியேற்புக்கான ஏற்பாட்டுக் குழுவிலும் அவர் அங்கம் வகித்தார்.

எதிர்வரும் நவம்பர் 3 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பின்தங்கி வருகிறார் எனத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டிரம்புடன் தொடர்புடைய சிலர் நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

எல்லியட் புரோய்டி எந்த வணிகருக்காக இத்தகைய முயற்சிகளை கட்டணம் பெற்றுக் கொண்டு எடுத்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் அந்த வணிகர் ஜோ லோ என கணிக்கப்படுகிறது.

4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை 1எம்டிபி மூலமாக கையாடிய குற்றத்திற்காக ஜோ லோ அமெரிக்காவிலும், மலேசியாவிலும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கிறார்.

வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்களுக்காக அமெரிக்க அரசாங்கத்திடம் இத்தகைய பிரச்சாரங்கள் செய்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் அவ்வாறு செய்ய விரும்புபவர்கள் முதலில் இதற்கான பதிவகத்தில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.

ஜோ லோ, எல்லியட் புரோய்டியிடம் தன் மீதான விசாரணைகளை நிறுத்துவதற்காக முதல் கட்டமாக 6 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியிருக்கிறார் என மற்றொரு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தன்மீதான விசாரணைகளை நிறுத்துவதில் எல்லியட் புரோய்டி வெற்றி பெற்றால் மேலும் கூடுதலாக 75 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஜோ லோ ஒப்புக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எல்லியட் புரோய்டி தனது சேவைகளுக்காக அரசாங்கத்திடம் முன்கூட்டியே பதிந்து கொள்ளவில்லை என்பதால் அவர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருக்கிறார்.

டிரம்புக்கும் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் இடையில் கோல்ப் விளையாட்டு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கும் எல்லியட் புரோய்டி ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், அத்தகைய கோல்ப் சந்திப்பு நடைபெறவில்லை.

2017 மே மாதத்தில் எல்லியட் புரோய்டி சீனாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஜோ லோவையும் சில சீன அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்திருக்கிறார். உயர்மட்ட அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் தனக்குள்ள செல்வாக்கு குறித்தும் அவர்களைத் தன்னால் முடிவுகள் எடுக்க வைக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

முதல் கட்ட 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பிறகு மேலும் கூடுதலாக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் தனது பணிகளுக்காகப் பெற்றிருக்கிறார்.