Home One Line P1 “ஜசெக இணையாவிட்டால் அன்வாருக்கு ஆதரவு” நஜிப் நிபந்தனை

“ஜசெக இணையாவிட்டால் அன்வாருக்கு ஆதரவு” நஜிப் நிபந்தனை

726
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று பிற்பகலில் நடைபெற்ற தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அன்வார் இப்ராகிமை ஆதரிப்போம் என்ற பரிந்துரை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் முன் வைத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

அந்தத் தகவலை நஜிப் உறுதிப்படுத்தினார். ஆனால் ஜசெகவுடன் இணையாமல் வந்தால் மட்டுமே அன்வாருக்கு ஆதரவு வழங்குவோம் என்ற நிபந்தனையையும் நஜிப் குறிப்பிட்டார்.

“எனினும் தனது முதல் பரிந்துரை, கொவிட் 19 பாதிப்புகள் தணிந்ததும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க நெருக்குதல் தருவதுதான்” என்றும் நஜிப் தனது முகநூல் பக்கத்தில் இன்றிரவு பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

அவசர கால உத்தரவைப் பிறப்பிக்க மாமன்னர் ஒப்புதல் அளிக்காததைத் தொடர்ந்து இன்று பல்வேறு நிலைகளில் அரசியல் கூட்டணிகள், கட்சிகளின் கூட்டங்கள் நடைபெற்றன.

இரண்டே இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் பெரும்பான்மையில் தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆட்சி செய்வதால் முதல் கட்டமாக அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதுதான் நாம் செய்ய வேண்டிய சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் நஜிப் கூறினார்.

“எனது இரண்டாவது பரிந்துரை என்பது அம்னோ, அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். காரணம் தேசியக் கூட்டணியில் அம்னோ நடத்தப்பட்ட விதம், சபாவில் நடைபெற்ற அரசியல் விவகாரங்கள் ஆகியவை காரணமாக அம்னோ அதிருப்தி கொண்டிருக்கிறது. எனினும் அன்வாருடன் இணையும் எனது பரிந்துரை ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது ஜசெக அதில் இணையக் கூடாது. இது இன்றைய கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டது” எனவும் நஜிப் பதிவிட்டார்.

“அம்னோ பெர்சாத்து கட்சியின் மொகிதின் யாசினுடனும் முன்னாள் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து பணியாற்ற முடியுமென்றால், ஏன் அன்வாருடன் இணைந்து பணியாற்ற முடியாது?” என்றும் நஜிப் கேள்வி எழுப்பினார்.