கோலாலம்பூர் : முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 1) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய தீவிர ஆதரவாளராக லோக்மான் கருதப்படுகிறார்.
புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார் அப்போது அவர் தனது முகநூல் நேரலையாக 2021 வரவு செலவு திட்டம் குறித்த தனது கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அந்த 28 நிமிட காணொலியை அவர் பதிவு செய்து முடித்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.
தனது காணொலியின் இறுதிப் பகுதியில் தனக்காக காவல்துறையினர் காத்திருப்பதாகக் கூறிய அவர், “அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்க விரும்பவில்லை” என்று கூறினார்.
பின்னர் வெளியிட்ட மற்றொரு காணொலியில் “நான் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
அவர் குறிப்பிட்ட அந்த சட்டம், குற்றவியல் ரீதியாக மிரட்டல் விடுக்கும் குற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
தான் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு ஒரு வழக்கறிஞரை அனுப்பும் படியும் இன்ஸ்பெக்டர் நசீர் என்பவரை தொடர்பு கொள்ளும்படியும் அவர் அந்த காணொலியில் தெரிவித்தார்.
லோக்மான் நூர் அடாம் கைது செய்யப்பட்டதையும், விசாரிக்கப்படுவதையும் புக்கிட் அமான் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது நிதி அமைச்சின் தொடர்பு துறை இயக்குனராக லோக்மான் நூர் அடாம் பணியாற்றினார்.