வாஷிங்டன் : 2020ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு மாநில வாரியாக கட்டம் கட்டமாக நிறைவு பெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்த வாக்களிப்புக்கான இறுதி நாள் நவம்பர் 3 ஆகும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைப்படி நவம்பர் 3 வாக்களிப்பு தேதி என்று குறிப்பிடப்பட்டாலும் பல மாநிலங்களில் பல நாட்களுக்கு முன்னரே மக்கள் வாக்களிக்க தொடங்கிவிடுவர்.
நேற்றைய நவம்பர் 3-ஆம் தேதிக்கும் முன்னதாகவே 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தி விட்டனர். இது அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.
கொவிட்-19 அபாயம் காரணமாக பல இடங்களில் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்குகளைச் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.
பரந்து விரிந்த அமெரிக்காவில் பல மாநிலங்களில் வெவ்வேறு நேரங்கள் பின்பற்றப்படுகின்றன. அதனால் அமெரிக்க நேரப்படி பல மாநிலங்களில் கட்டம் கட்டமாக வாக்களிப்பு நிறைவு பெற்று வருகிறது.
இனி வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் தெரிந்துவிடும். என்றாலும் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இருவருக்குமிடையிலான போட்டி, இழுபறி நிலையில் இருந்தால் முழுமையான தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம்.
கருத்துக்கணிப்பு கணிப்புகளின்படி ஜோ பைடன் முன்னணியில் இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் பின்தங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
எனினும் அமெரிக்க அதிபர் தேர்தல் தேர்வு முறை உலகின் மற்ற நாடுகள் எதிலும் பின்பற்றப்படப்படாத அளவுக்கு புதுமையான முறையில் நடைபெறுவதால் இறுதியில் அதிரடி மாற்றங்கள்- திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன், பொதுமக்கள் வாக்குகளின்படி, டிரம்பை விட மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றார். ஆனால் “எலெக்டோரல் வோட்ஸ்” எனப்படும் மாநில வாரியான வாக்குத்தொகுதிகள் ஒதுக்கீட்டின்படி இறுதியில் டிரம்ப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அடுத்த அதிபர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் முழுவதுமே இந்த தேர்தல் முடிவை பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.