கோலாலம்பூர்: டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ள பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தனது வேட்பாளரை வாரிசான் கட்சி அடையாளம் கண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் துணைத் தலைவர்ஜுஜான் சம்பகோங் தெரிவித்தார்.
இருப்பினும், வேட்பாளரின் அடையாளத்தை வெளிப்படுத்த அவர் மறுத்துவிட்டார். இது வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.
“பின்னர், தலைவர் ஓர் அறிக்கையை வெளியிடுவார். ஏனென்றால், வாரிசான் பிளாஸில் எங்களுக்கும் கூட்டணி உள்ளது. நாங்கள் விவாதிப்போம்.
“தயார்நிலையை பொறுத்தவரை, ஓர் அரசியல் கட்சியாக, நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் இன்று கூறினார்.
“தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது, பத்து சாபி இடைத்தேர்தல் தொடரும், அதாவது போட்டி இருக்கும்” என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் இதற்கு முன்னர் டிசம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான தேதியாக அறிவித்தது. நவம்பர் 23 மற்றும் டிசம்பர் 1 முறையே வேட்புமனு தாக்கல் மற்றும் முன்கூட்டியே வாக்களிப்பு என நிர்ணயித்திருந்தது.
அக்டோபர் 2-ஆம் தேதி லியு வுய் கியோங் மரணமுற்றதைத் தொடர்ந்து நாடாளுமன்ற காலியிடத்தை நிரப்ப பத்து சாபி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
முன்னதாக, தேசிய முன்னணி, பிபிஎஸ், ஜசெக மற்றும் பார்ட்டி சின்டா சபா உள்ளிட்ட பல கட்சிகள் சபாவில் தற்போதைய கொவிட் -19 பாதிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தன.