Home One Line P2 பீகார் : தேஜஸ்வி யாதவ் புதிய முதல்வராவாரா?

பீகார் : தேஜஸ்வி யாதவ் புதிய முதல்வராவாரா?

845
0
SHARE
Ad

பாட்னா : (மலேசிய நேரம் காலை 11.15 நிலவரம்) மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த இந்தியாவின் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 10ஆம் தேதி காலை முதல் நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பதற்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளின்படி தேஜஸ்வி யாதவ் (படம்) தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை சட்டமன்ற தொகுதிகளில் வென்று  அவரே அடுத்த முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி 107 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி 71 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

#TamilSchoolmychoice

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் 38 தொகுதிகள் பின்தங்கிய வகுப்பினருக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதிலும் 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தோற்றுவித்து தலைமை தாங்கி நடத்திய ஆர்ஜேடி என்னும் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

லல்லு பிரசாத் யாதவ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவரது கடைசி மகனான தேஜஸ்வி யாதவ் கட்சியின் முகமாகவும் பீகாரின் அடுத்த முதலமைச்சராகவும் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்று வருகிறார்.

இத்தனைக்கும் அவருக்கு வயது 31-தான். நேற்று நவம்பர் ஒன்பதாம் தேதி தான் அவர் தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார்.

காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் 29 தொகுதிகளில் ஆர் ஜே டி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

நடப்பு முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகிறது.

பீகார் மாநிலத்தைக் கைப்பற்ற 122 தொகுதிகளை குறைந்தபட்சம் ஒரு கட்சி கைப்பற்ற வேண்டும்.