Home One Line P1 “வரவு செலவு திட்டத்தில் B40 இந்தியர்களுக்கு ஒதுக்கீடு இல்லை” – எதிர்க்கட்சி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

“வரவு செலவு திட்டத்தில் B40 இந்தியர்களுக்கு ஒதுக்கீடு இல்லை” – எதிர்க்கட்சி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை

630
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2021 வரவு செலவு திட்டத்தில் B40 எனப்படும் இந்தியர்களுக்கு ஒதுக்கீடு இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், சிவராசா ராசையா, கருப்பையா முத்துசாமி, கேசவன் சுப்ரமணியம், பி.பிரபாகரன், ஜசெக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.சிவகுமார், சார்ல்ஸ் சந்தியாகு, ஆகியோர் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சேவியர் ஜெயகுமார்

அந்தக் கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

#TamilSchoolmychoice

1. நிதி அமைச்சர் முன்வைத்த 2021 வரவு செலவு திட்டம், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பி40 ஏழைகளை மீட்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வறுமையில் இருக்கும் இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அது தவறிவிட்டது.

2. மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்கென, ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட RM 50 மில்லியன், வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

3. இதை தெளிவுபடுத்துமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.

சார்ல்ஸ் சந்தியாகு

4. கோவிட்-19 தொற்றுநோயால், பல பி40 இந்தியக் குடும்பங்கள், குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் (informal workers) தங்கள் குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வியைச் சமாளிக்கப் போராடி வருகின்றனர். இணைய அணுகல் இல்லாமை மற்றும் மடிக்கணினி போன்ற வசதிகள் எங்கள் இந்திய பி40 குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். ஆக, பி40 குடும்பங்களுக்குத் தலா ஒரு மடிக்கணினி மற்றும் இலவச இணைய அணுகல் திட்டத்தை வழங்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

5. இந்த நேரத்தில், பல இந்திய வணிகங்கள் தங்கள் இலக்கை அடையப் போராடுகின்றன. இந்தத் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிப்பிழைக்க, அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்திய வணிகங்களுக்குக் கடன் ஒத்திவைப்பு (loan moratorium) மற்றும் மானியங்களை வழங்கி அரசாங்கம் உதவ வேண்டும். கடன்களுக்கான விண்ணப்பச் செயல்முறை, சிறு வணிகங்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும்.

பி.பிரபாகரன்

6. இந்தியச் சமூகத்தை, கோவிட்-19 பொருளாதாரத் தாக்கத்திலிருந்து மீளச்செய்ய, RM 100 மில்லியன் ஒதுக்கீட்டைப் பயன்படுத்த மித்ராவுக்கு ஓர் ஆக்கபூர்வமான அணுகுமுறை தேவை.

7. அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் வேறுபாடின்றி, பாதிக்கப்படக்கூடிய அனைத்து பி40 குடும்பங்களாலும் எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

8. சமூகநலத்துறை (ஜே.கே.எம்.), உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) (வாழ்வாதார உதவிதொகை – பி.எஸ்.எச். விண்ணப்பம்), தெக்குன், சொக்சோ மற்றும் இ.பி.எஃப். அலுவலகங்களில், பல்லினங்களின் அதிகாரிகளை முன்னணியில் நியமிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

9. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதிகளான நாங்கள், இந்தத் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க பி40 இந்திய ஏழைகளுக்கு அவசர உதவி தேவை என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

10. இந்த வரவுசெலவு திட்டம், இந்தியர்களின் தேவையையும் அவசியத்தையும் அறிந்து அவர்களின் பிரதிநிதிகளின் கலந்தாலோசனையுடன் உருவாக்கப்படவில்லை. அவ்வகையில் இது அனைவரையும் ஒருங்கிணைத்து சவாலை எதிர்கொள்ள தயாரிக்கப்பட்ட ஒரு தரமான வரவுசெலவு திட்டம் என்ற தகுதியை இழந்து விட்டது.

2021 வரவு செலவு – இந்தியர்களுக்கு என்ன இருக்கிறது?

1. ரிம 100 மில்லியன்

சிவகுமார்

2021-ம் ஆண்டிற்காக, தேசிய ஒற்றுமை அமைச்சில் RM 100 மில்லியன் ஒதுக்கீடு உள்ளது. இது 2018-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட RM 247 மில்லியனில் இருந்து கொண்டுவரப்பட்டது. சுமார் RM 29 மில்லியன், 2019-ம் ஆண்டும், 2020-ல் RM 90 மில்லியனும் பயன்படுத்தப்பட்டது.

2. ரிம 20 மில்லியன் + 5 மில்லியன்

இந்தியர்களைப் பொறுத்தவரை, இந்தியச் சமூகத்தின் சமூகப்-பொருளாதார நிலையை வலுப்படுத்த, 100 மில்லியன் ரிங்கிட் ‘இந்தியச் சமூக மாற்றப் பிரிவு’-ஆன மித்ராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தெக்குன், குறிப்பாக, இந்தியச் சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 20 மில்லியன் ரிங்கிட், SPUMI மற்றும் பிற சமூகங்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டிற்காக 5 மில்லியன் ரிங்கிட் ஆகியவற்றை வழங்கும்.