புது டில்லி: இந்தியாவில் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது அனைத்துலக கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. உரிமைகளை பாதுகாக்க அமைதியாக நடைபெறும் எல்லா போராட்டங்களுக்கும் கனடா ஆதரவளிக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு நாட்களாக இந்திய மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயச் சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கனடா பிரதமரின் இந்த கருத்துகள் போதிய ஆதாரங்கள் இல்லாதவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா தலைவர் தெரிவித்துள்ள கருத்துகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று இந்திய வெளியுறவு செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.