Home One Line P1 கெடா மந்திரி புசாரின் கூற்றுக்கு, பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்

கெடா மந்திரி புசாரின் கூற்றுக்கு, பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்

610
0
SHARE
Ad

கோலாலம்பூர், 3 டிசம்பர் (பெர்னாமா) — சட்டத்தை மீறுவதற்கு மக்களைத் தூண்டுவதால், ம.இ.கா. சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி புசார் முஹமாட் சனுசியின் அறிக்கை தொடர்பில், பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

முஹமாட் சனுசியின் இத்தகைய அறிக்கை வரம்பை மீறிவிட்டதாகவும் இந்நடவடிக்கை குறித்து பாஸ் கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ம.இ.கா. உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா கடுமையாக சாடி இருக்கிறார்.

2021-ஆம் ஆண்டு மாநில வரவு செலவுத் திட்டத்தில், இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டுத் தலங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்காதது குறித்து அம்மாநில ம.இ.கா. கிளை கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அண்மைய காலமாக ம.இ.கா-விற்கு பாஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கோலா கெடாவில் இருக்கும் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை உடைத்த கெடா மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை, ம.இ.கா-விற்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

“நாங்கள் சட்டத்தை அறியாதவர்களோ அல்லது மதிக்காதவர்களோ அல்ல. இதுவே அக்கோவில் அனுமதி இல்லாத நிலத்தின் மீது கட்டப்பட்டிருந்தாலும், அது பல ஆண்டுகளாக வழிப்பாட்டுத் தலமாக இருக்கிறது. நியாயமான மற்றும் அனைவராலும் எற்றுக் கொள்ளும் மாற்று வழியை சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் கண்டிருக்க வேண்டும். இதுவே, ம.இ.கா. கேள்வி எழுப்பினால், அது நாங்கள் சட்டத்தை மீறுவதாகவும் அல்லது பொதுமக்களை தூண்டுவதாகவும் அர்த்தமாகாது. நாங்கள் பிரதிநிதிக்கும் மக்களுக்கு போராடுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

“ம.இ.கா. சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி புசாரின் மிரட்டல் ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் பயப்படவில்லை. ஆனால் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் ஆகியோரின் சிந்தனையில் உருவான ம.இ.கா-பாஸ் ஒத்துழைப்பு, முஹமாட் சனுசியின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் மோசமடைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த ஒத்துழைப்பு மதம் சார்ந்த கட்சியான பாஸ்-சை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள வித்திட்டது,” என்று முருகையா மேலும் குறிப்பிட்டார்.

“கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் பின்பற்றுவது போல, தமது கட்சி நடுநிலையாகவும் இதர மதத்தின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதாகவும் பாஸ் கட்சி தலைவர் உறுதியளித்திருந்தார். ஆயினும், தற்போது கெடாவில் நிலைமை அதற்கு முரண்பாடாக இருக்கிறது. மத விவகாரங்களைத் தூண்டி விட்டு அரசியலாக்க புதிய மந்திரி புசார் முயற்சிக்கிறார்,” என்றும் அவர் சாடினார்.

ஆகவே, இவ்விவகாரம் குறித்து பாஸ் அமைதி காக்கக் கூடாது என்று வலியுறுத்திய முருகையா, அக்கட்சி தனது நிலைப்பாட்டையும் கெடா மந்திரி புசாரின் நடவடிக்கைக் குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

— பெர்னாமா