கோலாலம்பூர் : கெடா மாநிலத்தில் சில பகுதிகளின் அரிய வகை மண்வளங்களை அகழ்ந்தெடுத்து அதில் உள்ள உலோகத் தாதுகளை தரம்பிரிக்க சீனாவுக்கு அனுப்பப் போவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி அறிவித்திருக்கும் திட்டம் 1எம்டிபியை விட மிகப் பெரிய ஊழலாக வெடிக்கலாம் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
கெடா மாநிலத்தில் ஆலைய உடைப்பு விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கெடா மந்திரிப்பு சாரின் நடவடிக்கைகளையும் திட்டங்களையும் தொடர்ந்து பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.
அரிய வகை மண் வளங்களை அகழ்ந்தெடுத்து சீனாவுக்கு விற்பனை செய்யும் உடன்பாட்டை கெடா மந்திரி புசார் அண்மையில் அறிவித்தார். உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
“போதையில் உளறுகிறார்கள்” – கெடா மந்திரி பெசார்
ஆலய உடைப்பு விவகாரத்தில் கட்சிகள் இனவாதத்தை கிளப்புகின்றன என்று கடுமையாகச் சாடி இருக்கும் கெடா மந்திரி புசார், தொடர்ந்து அவர்கள் போதையில் உளறுகிறார்கள் என்ற தொனியில் கிண்டலடித்து இருந்தார்.
“ஒரே ஒரு போத்தல் மதுவைக் குடித்துவிட்டு 2 அல்லது 3 பாட்டில்கள் குடித்ததுபோல் காட்டிக் கொள்ளக் கூடாது என அவர் கீழ்த்தரமாக விமர்சித்து இருப்பது கடும் இந்திய சமுதாயத் தலைவர்களிடையே கடும் சர்ச்சைகளை, கண்டனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
கள் குடிக்கும் பிரபலத்தை அடைவதற்காக இப்படியெல்லாம் மஇகா, ஜசெக தலைவர்கள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும் கெடா மந்திரி புசார்கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்று முதல் கெடா மாநிலத்தின் அரிய மண் அகழ்ந்தெடுக்கும் குத்தகை, வெட்டுரமக் குத்தகைகள் ஆகியவை குறித்தும் தான் பகிரங்கமாக பேசப் போவதாக விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
“கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் கெடா மாநில அரசாங்கம் அரியவகை மண்ணை அகழ்ந்து எடுக்க உடன்பாடு கண்டுள்ளது. இதில் எத்தனை விழுக்காடு மாநில அரசாங்கத்திற்கு கிடைக்கும் என நான் கேட்க விரும்புகிறேன். மாநில அரசாங்கத்திற்கு 10 விழுக்காடு மட்டுமே அந்த நிறுவனம் வழங்கப்போவதாக நான் அறிகிறேன். அது உண்மையாக இருந்தால் இது ஒரு முட்டாள் தனமான உடன் பாடாகும். இந்த திட்டத்திற்கு முறையான பதில்கள் தெளிவாக கிடைக்காதவரை இதற்கான அனுமதியை மத்திய அரசாங்கம் வழங்கக்கூடாது என நான் வலியுறுத்த விரும்புகிறேன்” எனவும் விக்னேஸ்வரன் சாடினார்.
சிக், உலு மூடா, பாலிங் ஆகிய பகுதிகளில் அகழ்ந்து எடுக்கப்படும் மண் வளங்களில் இருந்து கிடைக்கும் தாதுப் பொருட்களின் மதிப்பு 62 பில்லியன் ரிங்கிட் எனவும் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி மதிப்பிட்டிருந்தார்.
இந்த மண்வள தாதுப் பொருட்கள் எந்த அளவுக்கு பூமியில் புதைந்திருக்கின்றன என்பது குறித்தோ, அதன் உத்தேச மதிப்பீட்டையும் முகமட் சனுசி இதுவரை அறிவிக்கவில்லை. குத்தகை பெற்றிருக்கும் அந்த நிறுவனத்தின் உண்மையான பின்னணி என்ன எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம் என்ற விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்துக் கருத்துரைத்த விக்னேஸ்வரன் “இந்த மண் தாது பொருட்களை மாநிலமே அகழ்ந்து எடுக்கும் பணிகளில் ஈடுபடலாம். அதன்மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தலாம். சீனாவுக்கு அனுப்பத் தேவையில்லை. கெடா மாநில மக்களின் செல்வ வளங்களை மாநில அரசாங்கம் பறிக்கக்கூடாது” என்றும் எச்சரித்தார்.
இன்னும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் 1எம்டிபி ஊழலை விட மிகப்பெரிய ஊழலாக இது வெடிக்கலாம் எனவும் விக்னேஸ்வரன் எச்சரித்தார். “அகழ்ந்தெடுக்கப்படும் மண் வளங்களை ஏன் உள்நாட்டிலேயே ஆய்வு செய்து அந்தத் உலோகத் தாதுகளை இங்கேயே தரம் பிரிக்க கூடாது? இதை ஏன் சீனாவுக்கு அனுப்ப வேண்டும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.