கோத்தா கினபாலு : எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா, புகாயா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாது என சபா அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தான் ராடின் அறிவித்தார்.
கிரிக் நாடாளுமன்றம் மற்றும் சபாவில் புகாயா மாநில சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல்கள் ஜனவரி 16 அன்று ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளன.
இரண்டு இடைத் தேர்தல்களுக்கும் ஜனவரி 4- ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளாகவும், ஜனவரி 12-ஆம் தேதி ஆரம்பக்கட்ட வாக்களிப்புக்கான தேதியாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கானி சல்லே, அறிவித்தார்.
கடந்த நவம்பர் 16 அன்று கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் காலமானார். தேசிய வீடமைப்புக் கழகத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையில், வாரிசான் சபா கட்சியைச் சேர்ந்த புகாயா சட்டமன்ற உறுப்பினர் மானிஸ் முகா முகமட் டாரா நவம்பர் 17 அன்று கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் காலமானார். 65 வயதான அந்த சட்டமன்ற உறுப்பினர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பயனளிக்காது காலமானார்.
அண்மையில் நடந்து முடிந்த16-வது சபா சட்டமன்றத் தேர்தலில் மாஸ் 8557 வாக்குகள் பெற்று 6,005 வாக்குகள் பெரும்பான்மையில் தன்னுடன் போட்டியிட்ட 6 வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.
அம்னோ சபா பின்வாங்குவதற்கு இத்தகைய பெரிய அளவிலான பெரும்பான்மையில் வாரிசான் கட்சி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.