ஈப்போ: பேராக்கில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்து கட்சியின் தேசியத் தலைமையின் எந்தவொரு முடிவையும் ஆதரிப்பதாக கிளந்தான் அம்னோ கூறியுள்ளது.
“கிளந்தான் அம்னோ, தலைவர் அல்லது உச்சமன்றக் குழுவின் எந்தவொரு முடிவையும் ஆதரிக்கும், ஏனெனில் நாங்கள் தலைமைக்கு மதிப்பளிப்போம்,” என்று கிளந்தான் அம்னோ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பேராக் மாநில அரசாங்கத்தை, எதிர்க்கட்சியான நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி உருவாக்க அம்னோ ஆலோசித்து வருகிறது என்ற தீவிர ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுவரை, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இதற்கான சாத்தியதை மறுத்து எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை.
அம்னோ உச்சமன்றம், கட்சியின் நிர்வாக குழு , இந்த விவகாரம் குறித்து இன்று இரவு விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அகமட் பைசால் அசுமு பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, புதிய தலைமைக்கான தேர்வில் இப்போது நம்பிக்கை கூட்டணியின் பெயரும் இடம்பெறுகிறது.