Home One Line P1 ரோஸ்மா ஊழல் வழக்கு – அரசு தரப்பு வாதங்களை நிறைவு செய்தது

ரோஸ்மா ஊழல் வழக்கு – அரசு தரப்பு வாதங்களை நிறைவு செய்தது

598
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு தங்களின் வாதங்களை இன்று வெள்ளிக்கிழமையுடன் (டிசம்பர் 11) முடித்துக் கொண்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ரோஸ்மா மீதான வழக்கில் அவரைத் தற்காப்பு வாதம் புரிவதற்கு அழைக்க போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதை இனி நீதிமன்ற நீதிபதி முடிவு செய்வார்.

ரோஸ்மா மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. கல்வி அமைச்சின் சார்பில் சரவாக்கில் 369 கிராமப்புற பள்ளிகளில் 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சூரிய சக்தி திட்டம் அமுலாக்கப்படவிருந்தது. இந்தத் திட்டத்தைக் கல்வி அமைச்சின் சார்பில் பெற்றுத் தருவதற்காக ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து,187.5 மில்லியன் ரிங்கிட் கையூட்டாகப் பெற்றதாக ரோஸ்மா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

2016 முதல் 2017 வரை ஜெப்பாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைடியிடமிருந்தது 6.5 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாகவும் ரோஸ்மா மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில் இதுவரையில் 23 சாட்சிகளை, 33 நாட்களில் அரசு தரப்பு விசாரித்தது.

இந்த வழக்கில் 5-வது சாட்சியாக விசாரிக்கப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மாட்சிர் காலிட் இன்று நடைபெற்ற வழக்கில் மீண்டும் சாட்சியம் வழங்க வரவழைக்கப்பட்டார்.

வழக்கு தொடர்பில் அவரிடம் மேலும் பல விளக்கங்கள் பெறப்பட்ட பின்னர் தங்கள் தரப்பு வழக்கை நிறைவு செய்வதாக அரசாங்க வழக்கறிஞர் குழுவுக்குத் தலைமையேற்ற முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தங்களின் தற்காப்பு வாதங்களை முன்வைக்க ரோஸ்மா தரப்புக்கு டிசம்பர் 28 வரை நீதிபதி முகமட் சைனி மஸ்லான் அவகாசம் வழங்கினார்.

அந்தத் தற்காப்பு வாதங்களுக்குப் பதிலளிக்க அரசாங்கத் தரப்புக்கு ஜனவரி 4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

எழுத்துபூர்வ வாதப் பிரதிவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் பிப்ரவரி10-ஆம் தேதி (2021) நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் செவிமெடுக்கப்போவதாகவும் நீதிபதி தேதி நிர்ணயித்தார்.

ரோஸ்மாவின் வழக்கறிஞராக ஜக்ஜிட் சிங் செயல்பட்டார்.