Home கருத்தாய்வு சுல்கிப்ளியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்க விரும்பும் தே.மு. – கண்டிக்க முடியாத ம.இ.கா! எதிராக...

சுல்கிப்ளியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்க விரும்பும் தே.மு. – கண்டிக்க முடியாத ம.இ.கா! எதிராக திரும்பும் இந்திய வாக்குகள்!

826
0
SHARE
Ad

Zulkifli Noordinஏப்ரல் 17 – இந்து மதத்தை கேவலப்படுத்தி பேசிய சுல்கிப்ளி நோர்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுக்க இந்து அமைப்புக்களும், இந்தியர் அமைப்புக்களும் ஏன் ம.இ.கா கூட குரல் கொடுத்தது.

ஆனால் அதற்கெல்லாம் பதில் கொடுக்காத – கொஞ்சமும் அசைந்து கொடுக்காத – நஜிப்பின் தேசிய முன்னணி அரசாங்கம், இன்றைக்கு அதே சுல்கிப்ளி நோர்டினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மகுடம் சூட்டி அழகு பார்க்க விரும்புகின்றது.

சுல்கிப்ளி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை. சில முஸ்லிம் தரப்புக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்ற அரசியல் காரணத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

ஆனால், அதற்காக அம்னோவில் கூட இல்லாத அவருக்கு – அம்னோவுக்கு வெளியில் இருந்து அவரைக் கூட்டி வந்து – நாடாளுமன்ற தேர்தலில் நஜிப் தொகுதி ஒதுக்க வேண்டுமா?

அதிலும் மலாய்க்காரர் அல்லாதவர்களை நாள்தோறும் சாடிவரும் – மற்ற மதங்களை இழிவுபடுத்தி வரும் – கிறிஸ்துவர்களின் பைபிளை எரிப்போம் என முழங்கி வரும் – பெர்காசா அமைப்பின் துணைத் தலைவராகிய சுல்கிப்ளியை மாலையிட்டு வரவேற்று அம்னோவுக்குரிய நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வைக்க  முன்வந்ததன் மூலம், இதுவரை சேகரித்துவைத்த இந்திய வாக்குகளை ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் எதிர்க் கட்சிகளுக்கு நஜிப் தாரை வார்த்து விட்டார்.

இதிலிருந்து பெர்காசாவுக்கும் அம்னோவுக்கும் இடையில் உள்ள தொடர்பை – நெருக்கத்தை – இணைந்து செயல்படும் போக்கை நஜிப் வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.

பெர்காசா என்பது அம்னோவின் உருவாக்கம்தான் என பலரும் இதுவரை விடுத்து வந்த எச்சரிக்கை இன்று உண்மையாகி விட்டது.

அதிலும் இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் 14 சதவீத இந்திய வாக்காளர்கள் – அதாவது சுமார் 14,000 இந்திய வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில் சுல்கிப்ளியை நிறுத்த நஜிப் அரசியல் ரீதியாக எப்படி முடிவெடுத்தார் என்பது புரியாத புதிர்தான்!

ம.இ.கா –  ஹிண்ட்ராப் என்ன செய்யப் போகின்றன?

சுல்கிப்ளி பேச்சைப் பார்த்து எதிர்ப்புக் குரல் காட்டி முழங்கிய ம.இ.கா தலைவர்கள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை?

ம.இ.காவினர் அவருக்காக ஷா ஆலாம் தொகுதியில் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களா?

பிரதமர் நஜிப்புடன் பேச்சு நடத்தி விட்டோம் என்றும் பெருமையுடன் கூறிக் கொள்ளும் ஹிண்ட்ராப் இயக்கத்தினர் – சுல்கிப்ளி பேச்சுக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஹிண்ட்ராப் இயக்கத்தினர் – இன்று என்ன செய்யப் போகின்றார்கள்?

தேசிய முன்னணிக்கு ஆதரவு தரப் போகின்றார்களா?

சுல்கிப்ளியின் பின்னணி

ஷா ஆலம் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் காலிட் அப்துல் சமாட்டை எதிர்த்துப் போட்டியிட தேசிய முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெர்காசா துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகி, அம்னோ சார்பு அமைப்பான பெர்காசாவுடன் இணைந்து தன்னை ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்கிப்ளி நோர்டின் இந்து மத கடவுள்களின் உருவச் சிலைகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள காணொளி, சமீபத்தில் சமூக வலைத் தளங்களான யு டியூப் (youtube) மற்றும் முகநூலில் வெளியிடப்பட்டு  நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தக் காணொளியில், இந்து கடவுள்களின் சிலைகள் என்ன வெறும் கல்லா?  என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு, மலேசியாவில் வாழும் அனைத்து இந்து மக்களின் மனதையும் சுல்கிப்ளி புண்படுத்தினார்.

இதனால் நாட்டில் பல இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மக்கள் கொதித்து எழுந்தனர். இந்திய சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பல அரசியல் கட்சிகள் அவரது பேச்சு குறித்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சுல்கிப்ளியின் பேச்சுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியதால், இறுதியில் வேறு வழியின்றி அனைத்து இந்திய மக்களிடமும் சுல்கிப்ளி மன்னிப்புக் கோரினார்.

அவரது மன்னிப்பு உண்மையானதா என்பது ஒருபுறமிருக்க – இந்திய மக்களின் மனதில் அவர் ஏற்படுத்திய காயம் என்றும் மறக்க இயலாதது என்பதே உண்மை.

இந்து மதத்தினரை இழிவு படுத்திய சுல்கிப்ளிக்கு, இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

please install flash

ஷா ஆலம் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக சுல்கிப்ளி போட்டியிடுவதன் மூலம்  பல காலமாக இந்திய சமுதாயத்தை வந்தேறிகள் என்று கூறியும், மற்ற மதங்களை அவமதித்தும் வந்திருக்கும் பெர்க்காசா அமைப்பும், அம்னோவும் இணைந்து செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

எனவே வரும் பொதுத்தேர்தலில் பெர்க்காசா அமைப்பைச் சேர்ந்த சுல்கிப்ளி போன்றவர்களைத்தான் – இந்திய மக்களின் துயர் துடைக்க வந்த விடிவெள்ளி என்று கூறிக் கொள்ளும் ஹிண்ட்ராப் இயக்கமோ அல்லது இந்திய மக்களுக்காக போராடும் அரசியல் கட்சியாக அறிவித்துக் கொள்ளும் ம.இ.கா வோ ஆதரிக்கப்போகிறதா?

அதே நேரத்தில், 14 சதவிகித இந்திய வாக்காளர்கள் உள்ள ஷா ஆலம் தொகுதியில், பெரும்பான்மையான இந்திய வாக்குகளும் சுல்கிப்ளிக்கு எதிராக திரும்பும் பட்சத்தில், அது தேசிய முன்னணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். நிச்சயம் தேசிய முன்னணி தோல்விதான் அடையும்

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலில் பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட காலிட் அப்துல் சாமாட், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரான அப்துல் அஜீஸ் சம்சுதீனை விட 9,314 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

மலேசியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் வெறுப்பிற்கும் ஆளாகியிருக்கும் சுல்கிப்ளியை தனது வேட்பாளராக தேசிய முன்னணி அறிவித்திருக்கும் நிலையில், அதன் தாக்கம் நிச்சயம் தேர்தலில் நாடு முழுக்க பிரதிபலிக்கும்.

இதனால் சுல்கிப்ளி மீது இந்தியர்கள் கொண்டிருக்கும் வெறுப்பும், எதிர்ப்பும் அப்படியே இனி தேசிய முன்னணி மீது திரும்புவது திண்ணம்.

அதனால், தேசிய முன்னணியும், இந்தியர்களைக் கொண்ட அதன் அங்கத்துவ கட்சிகளான ம.இ.கா, பிபிபி, கெராக்கான் போன்ற கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வந்த இந்தியர் ஆதரவை, நாடு முழுக்க போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் பெரும்பான்மையாக இழக்கப் போகின்றார்கள் – சுல்கிப்ளி நோர்டின் என்ற ஒரு தனி மனிதனுக்கு – அம்னோவில் இல்லாத ஒருவருக்கு – ஷா ஆலாம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய காரணத்தால்!

–    பீனிக்ஸ்தாசன்