கோலாலம்பூர்: கிரிக் மற்றும் சபாவில் புகாயாவிற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனவரி 16- ஆம் தேதி திட்டமிடப்பட்ட இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை மாமன்னர் ஒப்புதலுடன் ஒத்திவைப்பதாகக் கூறி, பிரதமர் மொகிதின் யாசின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், இவ்விரு தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இரண்டு இடைத் தேர்தல்களுக்கும் ஜனவரி 4- ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளாகவும், ஜனவரி 12-ஆம் தேதி ஆரம்பக்கட்ட வாக்களிப்புக்கான தேதியாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கானி சல்லே, அறிவித்திருந்தார்.
கடந்த நவம்பர் 16 அன்று கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் காலமானார்.
இதற்கிடையில், வாரிசான் சபா கட்சியைச் சேர்ந்த புகாயா சட்டமன்ற உறுப்பினர் மானிஸ் முகா முகமட் டாரா நவம்பர் 17 அன்று கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் காலமானார்.