கோலாலம்பூர்: அபுதாபிக்கு ஐந்து நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மேற்கொள்கிறார்.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமட் சாயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் இந்த சிறப்பு பயணம் மேற்கொள்ளப்படுவதாக அரண்மனை காப்பாளர் டத்தோ அகமட் பாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.
“இந்த சிறப்பு பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் ஷேக் முகமட் சாயீதுடன் அல்-சுல்தான் அப்துல்லா கலந்துரையாடுவார். ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் உயர் தலைமைகள், நாட்டில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் நோக்கத்திற்காக மலேசியாவிற்கு 500,000 கொவிட் -19 தடுப்பு மருந்தை வழங்கும் கோரிக்கையும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
மலேசியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உறவுகளை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் செய்யும் முயற்சிகள் குறித்தும் அல்-சுல்தான் அப்துல்லா விவாதிப்பார் என்று அகமட் பாடில் கூறினார்.
“நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின்படி, அல்-சுல்தான் அப்துல்லாவும் தூதுக்குழுவும் அபுதாபிக்கு புறப்படுவதற்கு நான்கு நாட்கள் (96 மணிநேரம்) கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் அபுதாபி அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தவுடன், அதே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.
அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் தூதுக்குழு அபுதாபியில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பு கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார்.
அரண்மனை திரும்பியதும், சுகாதார அமைச்சு தீர்மானித்தபடி, இஸ்தானா நெகாராவில் மாமன்னர் 10 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.