கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ராஹா இறுதிச் சடங்குகளில் சோகமும், பிரிவும் சூழ்ந்திருந்த அதே வேளையில், சில அபூர்வக் காட்சிகளும் அரங்கேறின.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் பிரதமர்களான மகாதீரும், நஜிப்பும். அண்மைய ஆண்டுகளில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் கூட சந்தித்துக் கொண்டதில்லை.
ஆனால், நேற்று தோபுவான் ராஹாவின் இறுதிச் சடங்குகளின்போது அவருக்கு இறுதி அஞ்சலி தெரிவிக்க வந்த மகாதீர், நஜிப்பை நேரில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மகாதீருடன் அவரது புதல்வர் முக்ரிஸ் மகாதீரும் உடன் வந்திருந்தார்.
நேற்றைய இறுதிச் சடங்குகளின்போது சுல்தான்களும் பிரமுகர்களும் தோபுவான் ராஹாவுக்கு இறுதி மரியாதை செலுத்தியதோடு நஜிப் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.
தோபுவான் ராஹாவுக்கு தேசிய மரியாதையுடன் கூடிய நல்லடக்கச் சடங்குகள் வழங்கப்படுவதாக பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப, தலைநகர் தேசியப் பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் தேசிய வீரர்கள் கல்லறையில் தோபுவான் ராஹா நல்லடக்கம் செய்யப்பட்டார்.
தோபுவான் ராஹா தனது இறுதி நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது பிரதமர் மொகிதின் யாசின், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர்.