கோலாலம்பூர்: இந்தோனிசிய தேசிய கீதத்தின் வரிகளை திருத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றி, அந்நாட்டை அவமதிக்கும் நோக்கம் கொண்ட முக்கிய சந்தேக நபர் இந்தோனிசிய நாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த காணொலி மலேசியாவில் செய்யப்படவில்லை என்றும் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
40 வயதுடைய இந்தோனிசிய தொழிலாளி ஒருவரை சபாவில் விசாரித்ததன் விளைவாக இந்த தகவல் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
“சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை சபாவில் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையில் காவல் துறை புதிய தடயங்களைக் கண்டறிந்தது. குற்றவாளி வேறு நாட்டைச் சேர்ந்தவர் (இந்தோனிசியா) என்று கூறப்படும் புதிய தடயங்களை காவல் துறை பெற்றுள்ளது. மேலும், காணோலியை தொகுத்தவர் யார் என்பது குறித்த அவரது வாக்குமூலம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் விசாரிக்கிறோம்,” என்று புக்கிட் அமானில் பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
மை ஆசியான் யூடியூப் பக்கத்தின் கருத்துப் பிரிவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த காணொலியில், இந்தோனிசிய தேசிய கீதத்தின் பாடல் வரிகள் மாற்றப்பட்டு, குடியரசை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றிருந்தது.