கோலாலம்பூர்: அம்னோ மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கைத் தொடர தேசிய கூட்டணி எடுத்த நடவடிக்கை தான் அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிருப்தி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் பதவிகளை விநியோகிப்பதில் அம்னோவின் அதிருப்தியைவிட இந்த விவகாரம் முன்னிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
” தற்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தின் கொடுங்கோன்மையைத் தொடர்கிறது. இதை செய்யக்கூடாது. நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்குகளில், (முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதீர் முகமட், (முன்னாள் சட்டத்துறைத் தலைவர்) டோமி தோமஸ் மற்றும் (முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர்) லத்தீபா கோயா ஆகியோரின் கொடுங்கோன்மை உள்ளது. மகாதீர் இப்போது அரசாங்கத்தில் இல்லை. டோமி தோமஸ் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. லத்தீபா கோயாவும் அதேதான். ஆனால், அவர்கள் கொண்டு வந்த வழக்குகள் ஏன் தொடர்கிறது? ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அகமட் மஸ்லான் தவிர, அம்னோ தலைவர்களில் நஜிப் ரசாக், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பெல்டா தலைவர் ஷாஹிர் சமாட் ஆகியோரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.