Home One Line P1 பெர்சாத்துவுடன் இணைந்திருப்பதா? அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்

பெர்சாத்துவுடன் இணைந்திருப்பதா? அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்

533
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 6) மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியுடனும் அதன் வழி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியுடனும் தொடர்ந்து இணைந்திருப்பதா என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதி அம்னோ பொதுப் பேரவை நடைபெறவிருக்கிறது. அந்தப் பொதுப் பேரவையில் பெர்சாத்துவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா என்ற முடிவு வாக்கெடுப்பின்வழி பேராளர்களால் நிர்ணயிக்கப்படும் என நேற்றைய அம்ன உச்சமன்றக் கூட்டம் முடிவெடுத்திருக்கிறது.

அம்னோவின் 189 தொகுதிகளும் சமர்ப்பித்துள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் ஷாரில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கீழ்க்காணும் 3 முக்கிய கோரிக்கைகளை அம்னோ அடிமட்டத் தொண்டர்கள் முன்வைத்திருக்கின்றனர் :

  • பாஸ் கட்சியிடனான உறவை வலுப்படுத்துவது
  • பெர்சாத்துவுடனான உறவை முறித்துக் கொள்வது
  • 2021 முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நெருக்குதல் அளிப்பது

மேற்காணும் மூன்று கோரிக்கைகளை தீர்மானங்களின் வழி எதிர்வரும் அம்னோ பொதுப் பேவையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பின் வழி இனி முடிவெடுக்கப்படும்.

பெர்சாத்து என்ன முடிவெடுக்கும்?

பெர்சாத்து கட்சியும் நேற்று புதன்கிழமை இரவு (ஜனவரி 6) தனது உச்சமன்றக் கூட்டத்தை நடத்தியது.

அம்னோவுடனான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு, அதன்  முடிவு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுவார் மூசா நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டது

தேசிய முன்னணி தலைமைச் செயலாளரான அனுவார் மூசா நீக்கப்பட்டது குறித்தும் அம்னோ உச்சமன்றம் நேற்றைய கூட்டத்தில் உறுதிப்படுத்தியது.

இந்த முடிவு குறித்து அனைத்து தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களின் வாய்மூல ஒப்புதல் பெறப்பட்டதாகவும், வழக்கமாக அம்னோவைச் சேர்ந்த ஒருவரே தேசிய முன்னணி தலைமைச் செயலாளராகப் பதவி வகிப்பார் என்பதால் அந்தப் பொறுப்புக்கு அகமட் மஸ்லான் நியமிக்கப்பட்டதாகவும் ஷாரில் ஹம்டான் தனது நேற்றைய அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.