வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் டொனால்டு டிரம்பின் அதிபர் பதவி ஏற்கனவே முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது.
நேற்று, “டொனால்டு ஜே. டிரம்பின் பதவிக்காலம் 2021-01-11 19:49:00 முடிவடைந்தது,” என்று கூறும் செய்தி அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றிபெற்றார். எனினும், தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.